
விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழகதரவரிசை பட்டியலில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடத்தை பிடித்துள்ளது.
உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான ‘கியூ.எஸ். குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்’ 2027-ம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. 1500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, கற்றல் அனுபவம், வேலைவாய்ப்பு, சர்வதேச தொடர்புகள், நிலைத்தன்மை ஆகிய 5 அம்சங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. நிகழாண்டில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். தரவரிசையில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடத்தை பிடித்துள்ளது. 2026-ம் ஆண்டில் கியூ.எஸ். தரவரிசையில் 691-ம் இடத்தை விஐடி பிடித்திருந்தது.
இதுகுறித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுடன் நிலவும் கடுமையான போட்டி சூழலில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். கியூ.எஸ். உலக பல்கலைக் கழக தரவரிசையில் நிலைத்தன்மை பிரிவில் 2026-ம் ஆண்டில் 352-ம் இடம் பிடித்ததுடன், இந்தியளவில் 7-ம் இடம் பிடித்தது.
அதேபோல கியூ.எஸ். உலக பல்கலைக்கழக பாடப் பிரிவு தரவரிசையில் 2026-ல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஐடி 119-ம் இடத்தையும் இந்திய அளவில் 6-வது இடத்தையும் பிடித்தது. கற்பித்தலில் புதுமை, ஆராய்ச்சி மேம்பாட்டில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி,உலகளவில் முதல் 200 தரவரிசை பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றார்.





No comments:
Post a Comment