THAMIZHKADAL TODAY NEWS

2027 ‘கேட்’ நுழைவுத் தேர்வை நடத்தும் சென்னை ஐஐடி - புதிதாக ‘ரொபோட்டிக்ஸ் & ஆட்டோமேஷன்’ பாடம் சேர்ப்பு


2027-ம் ஆண்டுக்கான 'கேட்' நுழைவுத் தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-வது வாரத்தில் தொடங்குகிறது.

மத்திய அரசு கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர கேட் (GATE) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி ஒருசில தனியார் கல்வி நிறுவனங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன.

மேலும், ஒருசில மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் கேட் மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனங்களையும் செய்கின்றன. கேட் தேர்வு மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. கேட் நுழைவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒர் ஐஐடி அல்லு ஓர் ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் நிறுவனம்) நடத்தும்.

அந்த வகையில் 2027-ம் ஆண்டு கேட் நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பு சென்னை ஐஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 2027 கேட் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பை சென்னை ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்டது.

அதன்படி 2027 கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி 6,7,13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் 30 பாடங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் புதிதாக 'ரொபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்' பாடம் சேர்க்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2027 கேட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. மாணவர்கள் இத்தேர்வு தொடர்பான முழு விவரங்களையும் https://gate2027.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel