Thamizhkadal WhatsApp Channel

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு



புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 34 மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆக.13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கைக் குறிச்சியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 7 பேருக்கு எம்பிபிஎஸ் மற்றும் ஒருவருக்கு பிடிஎஸ் என 8 பேருக்கு நிகழாண்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேபோல, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 5 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவற்றுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 30 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்கவும், 4 பேருக்கு பிடிஎஸ் படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் வீ.ஜோதி மணி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டு மருத்துவப் படிப்பில் சேர இடம் பெற்ற அரசுப் பள்ளி

மாணவ, மாணவிகள் 34 பேரில் 2 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே பிளஸ் 2 முடித்துவிட்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் தனியார் பயிற்சி மையங்களில் படித்து வெற்றி பெற்றுள்ளனர்.

அனைவருமே பிற மாவட்டங்களுக்குச் சென்றுதான் ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவிட்டுப் படிக்கின்றனர். எனவே, அரசே மாவட்டந்தோறும் பிரத்யேக நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் கூறியதாவது: 2020-ல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உள் இடஒதுக்கீடு மூலம் மாவட்டத்தில் 17 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல, 2021-ல் 34பேருக்கும், 2022-ல் 26 பேருக்கும், 2023-ல் 19 பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

2024-ல் 41 பேருக்கும், 2025-ல் 37 பேருக்கும், 2026-ல் 34 பேருக்கும் என கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 180 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்கவும், 28 பேருக்குப் பல் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் இதுவரை மொத்தம் 34 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தவிர, கால்நடை மருத்துவம், பொறியியல், வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். புதுக்கோட்டை அந்த அளவுக்கு கல்வி விழிப்புணர்வு பெற்ற மாவட்டமாக உள்ளது என்றார்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories