
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 14,274 மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சமீபத்தில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை, காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில், செப்டம்பர் 17-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க அரசு, ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து, 07.05.2022 அன்று அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்
அதனைத் தொடர்ந்து, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில், ஒரு லட்சத்து 14,095 மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில், 15.09.2022 அன்று மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர், 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய 19 லட்சத்து 34,230 மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் திமுக ஆட்சியிலேயே இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்
தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமூக நலத்துறை ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் காலை உணவு திட்டம், செப்டம்பர் 17ஆம் தேதி முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்படும் அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து கடந்த ஜூலை 22-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதால் அதலபாதாளத்திற்கு போன நிலத்தின் மதிப்பு
மேலும், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்து 14,274 மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியையும், இதற்கான தொடரும் செலவினத்திற்காக ரூபாய் 240.01 கோடியும், தொடரா செலவினத்திற்காக ரூபாய் 28.71 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 268.72 கோடிக்கான நிதி ஒதுக்கீடு செய்தும் உத்திரவிடப்பட்டிருந்தது.
காமராஜர் படித்த பள்ளியில் விரிவாக்க நிகழ்ச்சி
இந்நிலையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி, விருதுநகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் காமராஜர் படித்த கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளியில் வைத்து, ‘பெருந்தலைவர் காமராஜர் உணவுத் திட்டம்’ விரிவாக்கத்தை, முதலமைச்சர் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தென் மாவட்டத்திற்கு; அதுவும் காமராஜர் பெயரில் தொடங்கப்படும் திட்டத்தை தொடங்கி வைக்க அவரின் சொந்த ஊருக்கே முதலமைச்சர் ஜோசப் விஜய் செல்வது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment