THAMIZHKADAL TODAY NEWS

பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம்

2026 டிஆர்பி தேர்வு அட்டணையில் பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிப்பு இடம்பெற்றும் 4 மாதங்கள் ஆகியும் இன்னும் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படாததால் பி.எட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ( என்சிடிஇ ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு இருமுறை கட்டாயம் ‘டெட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் டெட் தேர்வினை தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, முதலாவது டெட் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2-வது டெட் தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியிட்டு தேர்வை டிசம்பரில் நடத்த வேண்டும். ஆனால் மே மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டிய முதலாவது டெட் தேர்வுக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக, ‘டெட்’ தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். 2026-ம் ஆண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முதல் டெட் தேர்வு கூட இன்னும் நடத்தப்படவில்லையே என அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது: என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி மத்திய அரசு திட்டமிட்டபடி ஆண்டுக்கு 2 முறை சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. ஆனால், என்சிடிஇ விதிமுறையை டிஆர்பி கண்டுகொள்வதே இல்லை. கடந்த 2025-ம் ஆண்டு நவம்பரில் ஒரேயொரு டெட் தேர்வு மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு மட்டும் நடத்தப்பட்டது. சிறப்பு டெட் தேர்வை பணியில் இல்லாதவர்கள் யாரும் எழுத முடியாது.

ஏற்கெனவே ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கக்கூடிய பொது டெட் தேர்வு இந்த ஆண்டு இன்னும் நடத்தப்படவில்லை. மே மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஜூலை நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய முதலாவது டெட் தேர்வே இன்னும் நடத்தப்படாத நிலையில், 2-வது தேர்வை எப்படி நடத்தப்போகிறார்கள்? என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும்போது டெட் தேர்ச்சியும் கேட்கிறார்கள். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு தேர்வை நடத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக சிறப்பு டெட் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை என்கிறார்கள். பொது டெட் தேர்வை பணியில் உள்ள ஆசிியர்களும் தாராளமாக எழுதலாம். சிறப்பு டெட் தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டால்கூட பொது டெட் தேர்வில் மீண்டும் முயன்று அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel