THAMIZHKADAL TODAY NEWS

TET - தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு?' - மத்திய அரசு பரிசீலனை செய்வதாகப் பரவும் தகவல் - உண்மை என்ன?


தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இதனால் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களிலும் போராடி வருகின்றனர்

ஆசிரியர் தகுதித் தேர்வு விதிகளில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்யவுள்ளதாகவும், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தளர்வுகள் வழங்கப் பரிசீலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் சுற்றறிக்கை பரவி வருகிறது.

கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளை பின்பற்றி நியமிக்கப்படுகின்றனர். 2011ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலை தான் இருந்தது.

ஆனால், அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2011&ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது போன்ற ஒரு போலி ஆவணம் கடந்த சில தினங்களாக இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் அரசு பரிசீலிப்பதாக அந்தப் போலி ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், 'டெட்' விதிகளில் மறுஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இதனால் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றங்களிலும் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் சட்டத் திருத்தம் வரப்போவதாக வெளியான தகவல், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

வைரலான அந்தப் போலிச் சுற்றறிக்கையில், 'டெட்' தேர்வு முறையை மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. முக்கியமாக, டெட் தகுதியின்றி பணியில் உள்ள ஆசிரியர்களின் பிரச்சனைகளை ஆராய்வது குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மாநில அரசுகள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்துடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுநலன் கருதி சட்ட விதிகளில் திருத்தம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இந்தச் சுற்றறிக்கை குறித்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. கல்வி அமைச்சகம் அப்படி எந்தவொரு சுற்றறிக்கையையோ, அறிவிப்பையோ வெளியிடவில்லை என அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களைக் குழப்பும் நோக்கில் இந்த விஷமத்தனமான ஆவணம் பரப்பப்படுவதாகவும் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் கல்வித் துறை அல்லது பணி நியமனங்கள் சார்ந்த எந்தவொரு முக்கிய அறிவிப்பாக இருந்தாலும், அதனை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக மட்டுமே உறுதி செய்துகொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் சரிபார்க்கப்படாமல் உலவும் வதந்திகளையும் போலி ஆவணங்களையும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் நம்பவோ, மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel