சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் தாமதம்; நீதிமன்ற தடை நீங்கியதால், உடனே வெளியிட 2.26 லட்சம் ஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பு; அடுத்த டெட் தேர்வு எப்போது நடைபெறும்?
/indian-express-tamil/media/media_files/2025/11/28/pg-trb-result-pg-trb-call-letter-pg-trb-cv-list-teacher-recruitment-board-trb-exam-shortlist-2025-11-28-12-37-24.jpg)
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடந்து முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும், முடிவுகளை வெளியிடுவதற்கான இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையிலும், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் தங்கள் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 2025 இல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 31, 2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இத்தேர்வில் (தாள் 1 மற்றும் 2) தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 3.2 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதனையடுத்து பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கும் வகையில், ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு ஜூலை மாதம் சிறப்பு டெட் தேர்வை நடத்தியது. இதனை சுமார் 2.26 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், தகுதிப் பெண்களைக் குறைக்கவும், சேவைக்கால அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கவும் கோரி ஆசிரியர் சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூலை மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தது. இருப்பினும் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விசாரணையின்போது இடைக்கால தடையை நீக்கி, முடிவுகளை வெளியிட அனுமதி அளித்தது.
"கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தது; ஆனால் முதல் தேர்வை நடத்த அரசுக்கு ஜூலை மாதம் வரை அவகாசம் தேவைப்பட்டது. தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. ஆசிரியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது. நாங்கள் செயலாளரிடமும் பிற அதிகாரிகளிடமும் மனு சமர்ப்பித்துள்ளோம், ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதில் தெளிவு இல்லை. தேர்வு முடிவுகளை வெளியிட்டு அடுத்த தேர்வை நடத்துவதே அரசின் முதன்மை முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். தோஸ் தெரிவித்தார்.
டி.ஆர்.பி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது உயர் நீதிமன்றம் தடை நீக்கியுள்ளதால், முடிவுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு டிசம்பரில் மற்றொரு சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு தேர்வு முடிவுகளுடன் சேர்த்து வெளியிடப்படும்" என்று கூறினார்.
இருப்பினும், உயர் நீதிமன்றத் தடை தாமதத்திற்கு ஒரு காரணியாக இருக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். "தேர்வு முடிவுகளைத் தயார் செய்து வைப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, முடிவுகளை வெளியிட மட்டுமே தடை விதித்திருந்தது. அரசு ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே முடிவுகளைத் தயார் நிலையில் வைத்திருந்து, நீதிமன்றம் தடையை நீக்கியதும் உடனடியாக வெளியிட்டிருக்க வேண்டும்" என்று இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த எஸ். நற்றமிழன் தெரிவித்தார்.










No comments:
Post a Comment