அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற பிறகும் வருடாந்திர ஊதிய உயர்வு (Annual Increments) வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருவது ஆசிரியர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
*பின்னணி என்ன?
கடந்த சில ஆண்டுகளாக TET தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பல ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற்று தங்களது தகுதியை முறைப்படி எட்டிவிட்டனர்.
இருப்பினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் அவர்களுக்கு உரித்தான ஊதிய உயர்வை வழங்க பல்வேறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEO) தொடர்ந்து மறுத்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
*அதிகாரிகளின் சாக்குபோக்குகள்:
புரோபவேஷன் (Probation) பிரகடனம் செய்யப்படவில்லை: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், 'நற்பயிற்சி காலம்' (Probation) முறைப்படி நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகள் ஊதிய உயர்வை மறுக்கின்றனர்.
உண்மைத்தன்மை சான்று (Genuineness Certificate) தாமதம்:
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் பெறப்படும் TET சான்றிதழ் உண்மைத்தன்மை சான்றைப் பெறுவதில் பெரும் நடைமுறைச் சிக்கல்களும் காலதாமதமும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, அந்தந்த மாவட்ட CEO-க்கள் மூலமாகவே உண்மைத்தன்மை சான்று பெற அரசு ஏற்பாடு செய்திருந்தும், 2025-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்குக்கூட இதுவரை உண்மைச்சான்று வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது.
*அரசாணை 618 கூறுவது என்ன?*
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணை நிலை எண்: 618 (G.O.Ms.No.618, நாள்: 06.07.1987) மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்ந்த பணிகள் பொது விதி 23A (General Rule 23A)-ன் படி:
"நற்பயிற்சிக் காலத்தில் சிறப்புத் தகுதிகளையோ அல்லது குறிப்பிட்ட தேர்வுகளையோ பெற வேண்டிய பணியாளர்கள், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், Probation முடிவடைந்ததாக முறைப்படி உத்தரவு பிறப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், அவர்கள் வழக்கமான தேதிகளில் வருடாந்திர ஊதிய உயர்வு பெற முழுத் தகுதியுடையவர்கள் ஆவர்."
இந்த விதியின்படி, ஆசிரியர்கள் அவர்களுக்கு பணிநியமன நாளிலிருந்து நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், உண்மைத்தன்மை சான்று பெறுவதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, CEO மற்றும் DEO அலுவலகங்கள் மூலமாகவே நேரடியாக உண்மைத்தன்மை பெறும் எளிய நடைமுறையை அரசு உருவாக்கியிருந்தது. ஆனால், இந்த அரசாணைகளையும் அரசு உத்தரவுகளையும் மதிக்காமல் சில மாவட்டக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து ஊதிய உயர்வை தடுத்து நிறுத்தி வைத்து வருகின்றனர்.
*ஆசிரியர்களின் கோரிக்கை:
"நிர்வாக ரீதியாக நடைபெறும் காலதாமதத்திற்கும், அதிகாரிகளின் அலட்சியத்திற்கும் ஆசிரியர்களைப் பலிகடா ஆக்குவது இயற்கை நீதிக்கு எதிரானது. G.O. 618-ன் படி, நிலுவையில் உள்ள கடந்த பல ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை அரியர்ஸ் (Arrears) தொகையுடன் உடனடியாக வழங்க பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் உடனடியாகத் தெளிவான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்" என பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் வலியுறுத்தியுள்ளனர்











No comments:
Post a Comment