மருத்துவ காலிப் பணியிடங்களை தேவையான சமயங்களில் நிரப்ப வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

நிர்வாக நெருக்கடிகளைத் தவிர்க்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை, மருத்துவப் பணிகள் தேர்வாணையம் உரிய விதிகளின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மருத்துவப் பணிகள் தேர்வாணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது.

ஆனால், இந்தக் காலிப் பணியிடங்களில், கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெறாத செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளனர். இதற்காக மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு விதிகளை மீறி விலக்கு அளித்துள்ளனர். இது சட்ட விரோதமானது. எனவே இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து செவிலியர் பணியிடங்களை நிரப்ப புதிதாகத் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் புகழ்காந்தி, அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு சிறப்பு வழக்குரைஞர் தம்பிதுரை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 2015-ஆம் ஆண்டில் நடந்த தேர்வில் வெற்றி பெறாத செவிலியர்களை தேர்வாணையத்தின் தேர்வு விதிகளில் விலக்களித்து ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களில் நியமித்திருப்பதை ஏற்க முடியாது. மேலும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் செவிலியர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அவசர கதியில் இவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததாகக் கூறப்படும் அரசுத் தரப்பு வாதம் ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் தேர்வு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. எனவே விதிகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள செவிலியர்களை எந்த காரணத்துக்காகவும் பணிவரன்முறை செய்யவோ அல்லது பணி நிரந்தரம் செய்யவோ கூடாது. அதே நேரத்தில் புதிதாக தேர்வு நடத்தும் சமயத்தில் தேர்வில் பங்கேற்க அவர்களை அனுமதிக்கலாம்.

எனவே மருத்துவப் பணிகள் தேர்வாணையம் தற்போது அமலில் உள்ள தேர்வு விதிகளை முறையாக பின்பற்றி, அதன் அடிப்படையில் தேர்வு நடத்தி நிரந்தர செவிலியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். அதுவரை தற்போது பணியில் உள்ள செவிலியர்களை பணியில் வைத்துக்கொள்ளலாம். இதுபோன்ற தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளைத் தவிர்க்க மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய விதிகளைப் பின்பற்றி தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். அமலில் உள்ள தேர்வு விதிகளை ஒருபோதும் மீறவே கூடாது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.