ஒரே செயலியில் நூறு சேவைகள் - சூப்பர் பிளான் போடும் ஜியோ நிறுவனம்


இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ சொந்தமாக வலைதளம் ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ சூப்பர் ஆப் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் ஒரே தளத்தில் 100 சேவைகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சூப்பர் ஆப் கிட்டத்தட்ட 100 சேவைகளை இயக்க வழி செய்யும் என்றும் இதில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் முதல் ஆன்லைன் முன்பதிவு என பல்வேறு சேவைகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.


சீனாவில் வீசாட் போன்று பல்வேறு சேவைகளை வழங்கும் செயலியின் மூலம் ஃப்ரீசார்ஜ், ஹைக், பேடிஎம் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற செயலிகளுக்கு இது போட்டியாக இருக்கும். சமீப காலங்களில் ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு நிறுவனங்களை கைப்பற்றுவதும், முதலீடு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவற்றில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் குரல் சார்ந்த தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு ஜியோ முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. சூப்பர் ஆப் மூலம் பயனர்கள் ஆன்லைன் முன்பதிவு, ஆன்லைன் வணிகம், கட்டணங்கள் செலுத்துவது மற்றும் மொபைல் ரீசார்ஜ் என மொத்தம் 100 சேவைகளை இயக்கலாம்.


ஜியோவின் சூப்பர் ஆப் மக்களின் தேவைகளை ஸ்மார்ட்போனிலேயே பூர்த்தி செய்யும் ஒற்றை தளமாக இருக்கும் என கூறப்படுகிறது. உலகின் ஆன்லைன் – ஆஃப்லைன் வணிக தளத்தை ஜியோ உருவாக்கி வருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஆன்லைன் விற்பனையாளர்கள் செய்யும் அனைத்தையும் சில்லறை விற்பனையாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.