Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 21, 2019

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை- எடப்பாடி அறிவிப்பு

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில், அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 2014-15ஆம் ஆண்டு முதல் ஒரு விடுதிக்கு தலா 15,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு வந்தது.2018-19-ம் ஆண்டில், 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களில் செயல்படும் 99 கல்லூரி விடுதிகளுக்கு இத்தொகை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.



மின் உபகரணங்கள், நீரேற்றும் மின் மோட்டார், நீர்தேக்கத் தொட்டி, பாத்திரங்கள், எரிவாயு இணைப்பு, கழிவு நீர் குழாய் மற்றும் தொட்டி ஆகியவற்றில் ஏற்படும் அடைப்புகள், கதவு மற்றும் ஜன்னல்கள், விளையாட்டு உபகரணங்கள், கட்டில்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுது பார்க்கும் பணிகள், அவசர சூழ்நிலைகளில் மாணவர்களுக்கான மருத்துவ செலவினங்களை மேற்கொள்ளுதல் போன்ற செலவுகளுக்கு தற்போது வழங்கப்படுகின்ற முன் பணத் தொகை 15,000 ரூபாய் மற்றும் 20,000 ரூபாயினை50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏற்படும் 4 கோடியே 51 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்து வழங்கும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் மூலம் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு போன்ற கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட அனைத்து திட்டங்களிலும் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் பயிலும் தமிழ்நாடு மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.



நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியரிடமிருந்து கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே, பட்டியலிடப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு 2 கோடி ரூபாயினை அம்மாவின் அரசு ஒதுக்கீடு செய்து வழங்கும்.



பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் உள்ள விடுதிகளில், 1,277 விடுதிகள் அரசுக் கட்டடங்களிலும், மீதமுள்ள 71 விடுதிகள் வாடகை கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 25 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுப்பணித் துறையால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 46 விடுதிகளில், 14 விடுதிகளுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் அம்மாவின் அரசால் கட்டப்படும்.

2019-20-ம் ஆண்டில் 2 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், 2 மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகள் மற்றும் 2 சிறுபான்மையினர் விடுதிகள் என மொத்தம் 6 கல்லூரி விடுதிகள், 2 கோடியே 56 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக துவங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.