Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 11, 2019

அறிவியல் ஆசிரியர் விருது - ரூ.25 ஆயிரம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும், ஊக்கப்படுத்தவும், அதன் வாயிலாக மாணவர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அறிவியலாளர்களாக உயர்த்தவும் அறிவியல் நகரம் சார்பில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ₹25 ஆயிரம், பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும் சென்னை அறிவியல் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 5 வகை பாட பிரிவுகளில் வகுப்பு எடுத்திடும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், புரிந்துள்ள சாதனைகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 10 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட உள்ளது.


ஐந்து விருதுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுபிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இருந்து சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்க ஏதுவாக ஐந்து வகை பாட பிரிவுகளில் பாட பிரிவுக்கு ஒன்று வீதம் மாவட்டத்திற்கு 5 பாட பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் அறிவியல், உயிர் அறிவியல், கணினி அறிவியல், புவியியல், நடைமுறை வேளாண்மையியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.