Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 6, 2019

போக்குவரத்து விதிமீறல்: இனி சிறப்பு எஸ்.ஐ.க்களும் அபராதம் விதிப்பார்கள்: தமிழக அரசு அரசாணை


தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இனி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களும் (எஸ்.எஸ்.ஐ) வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதிக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இது குறித்த விவரம்:
நாட்டிலேயே அதிகம் சாலை விபத்துக்கள் நடைபெறுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 63,920 சாலை விபத்துக்களில் 12,216 பேர் இறந்துள்ளனர், 74,537 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துக்களினால் ஒருநாளைக்கு சராசரியாக 33 பேர் இறந்துள்ளனர், 204 பேர் காயமடைந்துள்ளனர்.


சாலை விபத்துக்களைத் தடுக்க அரசு எடுத்த தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, சாலை விபத்துக்கள் இரு ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள்ளேயே நீடிக்கிறது.
கடந்த ஆண்டு ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் 62,249 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 11,720 பேர் இறந்துள்ளனர், 66,962 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துக்களில் 93 சதவீதம் வாகன ஓட்டுநர்களில் தவறுகளால் ஏற்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. இதில் உயிரிழப்பு ஏற்படும் சாலை விபத்துக்களில் 73.7 சதவீதம் வாகன ஓட்டுநர்களின் தவறுகளால் ஏற்படுவதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது.


ஓட்டுநர்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதால் 47.9 சதவீதமும், அலட்சியம், முந்திச் செல்லுதல் போன்றவற்றால் 41 சதவீதமும், மதுபோதையின் காரணமாக 2.6 சதவீதமும் விபத்துகள் நேரிடுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவிக்கிறது.
உயர்நீதிமன்ற உத்தரவு: இதைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சாலை விபத்து தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில், காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவதற்குரிய அதிகாரம் வழங்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.


இதன்படி, தமிழக அரசு ஒரு அரசாணையை புதன்கிழமை வெளியிட்டது.
இந்த அரசாணையின்படி இனி தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களிலும், போக்குவரத்துப் பிரிவிலும் பணியாற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிபவர்கள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதிக்கலாம்.
தீவிரமாக அமல்படுத்தப்படும்: இந்த உத்தரவின் விளைவாக, காவல்துறை அதிகாரிகளின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் மோட்டார் வாகனச் சட்டம் இன்னும் தீவிரமாக அமல்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஏனெனில் இதற்கு முன்பு வரை காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மட்டுமே போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான வழக்குகளை பதிவதற்கு அதிகாரம் இருந்தது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment