அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் திரிபுரா


திரிபுரா மாநிலத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 961-ஐ ஒன்றிணைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திரிபுரா கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''திரிபுராவில் 4,398 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.இதில், 915 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 46 நடுநிலைப் பள்ளிகளில் 0 முதல் 25 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அத்தகைய பள்ளிகளில் சரியான கல்வி மாணவர்களுக்குக் கிடைக்காது. எனவே ஏற்கெனவே நல்லபடியாக இயங்கும் பள்ளிகளோடு இந்த 961 பள்ளிகளையும் இணைக்க முடிவெடுத்துள்ளோம்.

ஏற்கெனவே திரிபுரா பழங்குடி இன மாவட்ட மைய நிர்வாகம் ஏராளமான பள்ளிகளை இணைத்துள்ளது. இதன்மூலம் நல்ல விளைவுகளே ஏற்பட்டன. படிப்படியாக இந்த இணைப்பு நடைபெறும். இந்த ஆண்டும் 1000 மாணவர்களையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 4,000 மற்றும் 3,000 மாணவர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்ற உள்ளோம்.இதனால் வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் பள்ளி இருக்கும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கு, மாநில அரசே கட்டணத்தை வழங்கும்'' என்று தெரிவித்தார். கட்டமைப்பு வசதிகளில் பற்றாக்குறை, குறைவான மாணவர் சேர்க்கை, பெற்றோர் மற்றும் மாணவர்களின் அதிருப்தி உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.