இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாத்திரை கண்டுபிடித்த அமெரிக்க ஆய்வாளர்கள்


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டைப் 1 சர்க்கரை நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாள்தோறும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர். தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளும் இந்த இன்சுலின் ஊசிக்கு பதிலாக தற்போது மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஆய்வாளர்கள் தயாரித்த இந்த மாத்திரை, பன்றியிடம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

இந்த மாத்திரையை உட்கொண்ட உடனேயே நேரடியாக சிறுகுடலை சென்றடையும் என்றும், 30 மி.மீ நீளத்திற்கு இந்த மாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, ஜீரண மண்டல அமிலங்களில் பாதிக்காமல் இருக்க இந்த மாத்திரைகள் மீது பிரத்யேக பூச்சு பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், சிறுகுடலில் பி.ஹெச். அளவு அதிகம் இருக்கும் என்பதால் அப்பகுதியை அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்றும், பின் மடங்கிய கைகள் போன்ற அமைப்பு, ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஊசி போன்ற கொத்துக்களை சிறுகுடல் சுவற்றில் புகுத்தும். அப்போது, ஊசி போன்ற கொத்துகள் கரைந்து அதில் உள்ள இன்சுலின் மருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். மாத்திரையோடு வந்த பிற பாகங்கள் தன்னிச்சையாகவே கரைந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.