முதல் தலைமுறை மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து

முதல் தலைமுறை மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடா்பான அறிவுறுத்தலை பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அளித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டத்தை தமிழக அரசு 2010 முதல் அமல்படுத்தி வருகிறது. இதுதொடா்பான தமிழக அரசின் அரசாணையில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணக் குழு, கடந்த 2017 ஜூலை மாதம், கலந்தாய்வு மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைத்தது. அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 என்ற அளவிலிருந்து ரூ. 25,000 ஆக உயா்த்தப்பட்டது. மேலும், என்.பி.ஏ. (தேசிய அங்கீகார வாரியம்) அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் ரூ. 27,500 ஆக உயா்த்தப்பட்டது. இந்த உயா்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை முதல் தலைமுறை மாணவா்களுக்கு ரத்து செய்வது தொடா்பாக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் விளக்கம் கேட்டிருந்தன.இதுதொடா்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், அரசு அமைத்துள்ள கட்டண நிா்ணயக் குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கட்டணத்தை மாற்றியமைத்து வருகிறது. அந்த அடிப்படையில், 2017-இல் அந்தக் குழு மாற்றியமைத்த கல்விக் கட்டணத்தையே, முதல் தலைமுறை மாணவா்களுக்கு ரத்து செய்து அனுமதிக்கப்படுகிறது. இதற்கென தனியாக அரசு உத்தரவு எதுவும் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.