பள்ளி பொதுத் தேர்வுகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான நேரம் 2 மணி 30 நிமிஷங்கள் என்பதை 3 மணி நேரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கடந்த கல்வி ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. ஒப்பீட்டளவில் அதிகப் பாடங்களைக் கொண்டிருப்பதாகவும், எனவே தேர்வு எழுத நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரமான 2 மணி 30 நிமிஷத்தை கூடுதலாக அரை மணி நேரம் சேர்த்து 3 மணி நேரமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தை 3 மணி நேரமாக மாற்ற பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கூடுதல் நேரம் தேவை: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய பாடத் திட்டத்தின் காரணமாக மாணவர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்பட்டது.
இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.,அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை செயலருடன் ஆலோசித்து, பொதுத் தேர்வுகளுக்கான நேரத்தை 2 மணி 30 நிமிஷங்களில் இருந்து 3 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை இந்தக் கல்வியாண்டில் இருந்தே நடைமுறைக்கு வரும். இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.