Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 19, 2019

அரசுப் பணியாளர்கள் வீடுகட்ட முன்பணம்


அரசுப் பணியாளரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் அரசாங்கம் அவர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது. இந்த சலுகை நான்கு ஆண்டுகள் முறையான பணி மற்றும் உள்நுழைவு பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. நிலம் வாங்கி வீடு கட்டுதல், தயார் நிலையில் உள்ள வீட்டை வாங்குதல், தனியார் அமைப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகியவற்றால் கட்டப்படும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை வாங்க இந்த கடனுதவி வழங்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் அளிப்பதன் அடிப்படையில் மனைவி அல்லது கணவன் பெயரில் உள்ள நிலங்களில் வீடு கட்டவும், இக்கடன் அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இப்பிரிவின்கீழ் அதிகபட்சம் ரூ.25 லட்சம், அனைத்திந்திய பணி அலுவலர்களுக்கு ரூ.40 லட்சம் கடனாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் தொகையினை, 50 சதவிகிதம் என்ற வரம்பிற்குட்பட்டு, தற்போது குடியிருக்கும் வீட்டின் விரிவாக்க பணிகளுக்கும் பயன் படுத்தலாம்.கடன் தொகையானது அதிகபட்சம் 180 தவணைகளாக, முதலில் அசல்முழுவதும் பிடித்தம் செய்யப்பட்டு பின்னர் வட்டி பிடித்தம் செய்யப்படும். கடன் தொகைக் கான வட்டி, மாதாந்திர நிலுவைத் தொகைக் குறைவின் (Monthly diminishing balance) அடிப்படையில், ஒவ்வொரு மாத இறுதியில், நிலுவையாக உள்ள தொகைக்கு படிவீத முறைப்படி (Slabrates) கணக்கிடப்படும்.அரசு வீட்டுக்கடன் பெற்ற ஓர் அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் அவர் குடும்பத்துக்கு உதவ, ‘அரசு பணியாளர் வீடு கட்டும் முன்பண சிறப்பு குடும்ப சேமநல நிதித் திட்டம்’ செயல்பட்டு வருகிறது. இதன்படி, வீடுகட்டும் முன்பணம் பெறும் அனைத்து அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும், மாதாந்திர தவணைத் தொகையில் 1 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு, அரசால் ஒரு நிதியாக பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ள ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால், அவரது கணக்கில்நிலுவையிலுள்ள முன்பணம் அசல் மற்றும் வட்டியுடன் இந்நிதியிலிருந்து சரிசெய்து கொள்ளப்படும்.