தமிழகத்தில் 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்


வேலூர்: தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1000 பள்ளி, கல்லூரிகளில் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டங்கள் அமைக்கப்படுகிறது. தமிழக்ததில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதுமான காலியிடம் இருந்தால் அங்கு தோட்டமும், இல்லாவிட்டால் அந்த கட்டிடங்களின் மொட்டை மாடியில் தோட்டமும் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்து பணிகளை தொடங்கியுள்ளது.முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் சதுர அடியில் மாடித்தோட்டம் அமைக்க தலா ஒரு பள்ளி, கல்லூரிக்கு தோட்டக்கலைத்துறையால் தோட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ₹5 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாடித்தோட்டம் அமைக்க விதை, உரம், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் ஆழ்துளை கிணறு அமைக்கவும், சொட்டுநீர் பாசன கட்டமைப்பும், நிழல்வலைக்கூடம் அமைக்கவும் உதவி செய்யப்படும்.மேலும் தோட்டத்தில் தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தவரங்காய், மிளகாய், பீர்க்கன், பாகற்காய், அவரை, பூசணிக்காய், அகத்திக்கீரை அரைக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை, கருவேப்பிலை ஆகியவை உற்பத்தி செய்யப்படும். இதற்கான தேர்வு செய்யப்பட்ட விதைகளும் தோட்டக்கலைத்துறையால் வழங்கப்படும்.இப்பணிக்காக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், துறை அலுவலர், மாணவர் பிரதிநிதி ஒருவர் என 5 பேர் கொண்ட தோட்டக்கலைக்குழு ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.