10,12 வகுப்புகளுக்கு புதிய திருத்தம்! பாடங்களின் அளவைக் குறைத்து 2 முறை பொதுத் தேர்வு!


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த மே மாதம் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதன் அம்சங்கள் நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், பொது மக்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை ஏற்று அரசு திருத்தம் செய்து வருகிறது.

இப்பணி நிறைவு பெற்றதும் திருத்தப் பட்ட புதிய கல்விக் கொள்கை மத்திய அமைச்சரவையின் பார்வைக்கு அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்படும்.அமைச்சரவை அனுமதி வழங்கியதும், நவம்பர் 18-ல் தொடங்க உள்ள நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், புதிய

கல்விக் கொள்கையில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகளில் புதிய மாற்றம் செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி, ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்வு இனி பாதியாகப் பிரித்து 2 முறை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இதில், முதல் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் 2-வது தேர்வில் சேர்த்து எழுத அனுமதிக்கப்படுவர். இதன்மூலம், ஒரே ஒரு இறுதித் தேர்வுக்காக இதுவரை பயின்று வந்த மாணவர்களின் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறும்போது, 'மாணவர்கள் இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில், அவர்கள் சுமையை குறைக்க பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு கிடைத்துள்ளன.

இதில் சிறந்ததாகக் கருதப்பட்டதால் பொதுத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் ஏற்கெனவே உள்ள பாடங்களின் அளவைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

எனவே, புதிய கல்விக் கொள்கை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. அதற்குள், புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ற வகையில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களையும் அரசு வெளியிட வேண்டி இருக்கும்.

இதற்கான புதிய பாடப்புத்தகங்கள் மறுவருடமே வெளியிடுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில், இதே புகார் காரணமாக, இதற்கு முன்பும் பாடங்கள் குறைக்கப்பட்டு 2018-ம் ஆண்டு புதிய பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி வெளியிட்டிருந்தது.இத்துடன், விருப்பப் பாடங்களில் புதிதாக பல தொழில் பிரிவுகளும் சேர்க்கப்பட உள்ளன. விளையாட்டு மற்றும் நடனப்பிரிவு களும் அதில் விருப்பப் பாடங்களாக இருக்கும். இதன்மூலம், மாணவர்கள் கல்வி பயிலும் போதே தங்கள் எதிர்காலத்துக்கான துறைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

எனினும், புதிய கல்விக் கொள்கையில் கட்டாயப் பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு இடையே வேறுபடும் முக்கியத்துவமும் களையப்பட உள்ளது.இதேபோல, 8-ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் மட்டுமே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப் பட உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மட்டும் கட்டாயப்படுத்தப்படும் இந்தமுறை, தனியாரால் ஆங்கில வழியில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொருந்தாது என எதிர் பார்க்கப்படுகிறது. இது ஏற்கெனவே அமலில் உள்ள மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதாக அமையும் எனவும் கருதப்படுகிறது.

இப்போது குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 3 ஆக உள்ளது. இதை 4 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கல்வி உரிமை சட்டத்தின்படி, 8-ம் வகுப்பு வரை கல்வி வழங்குவது கட்டாயமாக உள்ளது. இது 9 ஆக உயர்த்தப்பட உள்ளது.