Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 22, 2019

தகுதித் தேர்ச்சி பெறாதோர் பணி நீக்கமா? ஆசிரியர்களின் அச்சத்தை நீக்க வேண்டும்!

ராமதாஸ் அவர்களின்
--- --அறிக்கை--

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1757 பேரின் விவரங்களை சேகரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு ஆசிரியர்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1757 ஆசிரியர்களும் எந்த மாவட்டத்தில், எந்த பள்ளியில் பணியாற்றுகின்றனர். அவர்கள் பணியாற்றும் பள்ளிகள் சிறுபான்மையினருக்கான பள்ளியா? சிறுபான்மையினர் அல்லாத பள்ளியா? அந்த ஆசிரியர்கள் எந்தப் பாடத்தை நடத்துகின்றனர்? அவர்கள் பணியில் சேர்ந்த நாள் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் கடந்த சில நாட்களாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநரிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்க விதிகளின்படி அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருவதால், தங்களை உடனடியாக பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் அந்த ஆசிரியர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அச்சம் தேவையற்றது என்றாலும் கூட, அவர்களின் பார்வையில் பார்க்கும் போது தாங்கள் பணி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற ஆசிரியர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது.




ஏனெனில், இந்தியாவில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி விதிகள் வகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஓராண்டு கழித்து 2011 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தான் தமிழகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். கல்வி உரிமைச் சட்டம் தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கும், தமிழக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்பதால், அவர்கள் தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள், அதாவது 2016ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் அச்சத்திற்கு காரணம் ஆகும்.




அதேநேரத்தில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய இடைக்காலத் தடை விதித்திருப்பதுடன், அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர். அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. அதனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்க முடியாது. அதனால் அவர்களின் அச்சம் தேவையற்றது.




மற்றொருபுறம், இப்போது எந்தத் தேவையும் இல்லாமல் இத்தகைய கணக்கெடுப்பை தமிழக அரசு எடுப்பது ஏன்? என்ற வினாவும் எழுகிறது. பள்ளிக்கல்வித் துறையின் கணக்கெடுப்பால் தான் ஆசிரியர்களிடம் ஒரு விதமான பதற்றமும், அச்சமும் நிலவுகிறது. எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கும் நோக்கம் இக்கணக்கெடுப்பின் பின்னணியில் இல்லை என்ற உண்மையை விளக்கி ஆசிரியர்களிடம் நிலவும் அச்சத்தை அரசு போக்க வேண்டும்.




அதுமட்டுமின்றி, கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டதும் 1757 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததற்கு காரணம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு வேறு வகையில் அவர்களின் கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்து 1757 ஆசிரியர்களும் பணியில் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.