புதிய தேசிய கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்படும்?

புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தூய்மையான வளாகத்தை கொண்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில், 2019ம் ஆண்டு மூன்றாவது தூய்மை தரவரிசை பட்டியலில் 7 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், சுத்தமான மற்றும் சீர்மிகு வளாகம், ஒரு மாணவர் ஒரு மரம் வளர்த்தல், ஜல்சக்தி அபியான் போன்ற பிரிவுகளில் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் பேசுகையில், 'மாணவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை சேமிப்போம் என உறுதியேற்க வேண்டும். தங்களின் நண்பர்கள், உறவினர்களிடமும் இதை வலியுறுத்த வேண்டும்,' என்றார்.
தொடர்ந்து பேசிய மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் (உயர்கல்வி) சுப்ரமணியன், 'தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளோம். புதிய கல்வி கொள்கை, விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான முக்கிய மாற்றத்தை, இந்த கல்விக் கொள்கை ஏற்படுத்தும். இது உலகிலேயே மிக சிறந்த ஒன்றாக இருக்கும்,' என்றார்.