Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 11, 2020

பிளஸ்2 கணித தேர்வு எப்படி இருந்தது? ஆசிரியர்கள் சொல்வது என்ன?


பிளஸ்2 கணிதத் தேர்வு மிகக்கடினம் அல்ல; ஆனாலும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. திங்கள்கிழமை (மார்ச் 9) கணிதத்தேர்வு நடந்தது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்படிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாடம் என்பதால், கணிதத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மொழிப்பாடங்களைக் காட்டிலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வுகள் என்பதால், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் மத்தியிலும் கணித வினாத்தாள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. என்னவென்றால், நடப்புக் கல்வி ஆண்டில் எந்த ஒரு பாடத்திற்கும் வினாத்தாள் கட்டமைப்பு (புளூ பிரிண்ட்) வழங்கப்படாததும் வினாத்தாள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாக இருந்தது.



இந்த நிலையில்தான், மார்ச் 9ம் தேதியன்று ஆர்வத்துடன் கணிதத் தேர்வை எதிர்பார்த்துச் சென்ற மாணவர்களுக்கு, சற்று அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு பாடத்தின் பின்பகுதியிலும் கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி வினாக்களை மட்டுமே படித்துப் பயிற்சி எடுத்துச்சென்ற மாணவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
உதாரணாக ஒரு மதிப்பெண் வினாக்கள், பெரும்பாலும் புத்தகத்தின் உள் பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் கேட்கப்படாததும், தேர்வர்களை சற்றே சோர்வடையச் செய்திருக்கிறது.
என்றாலும், பாட நேரத்தில் முறையாக கவனித்து வந்த மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று விடுவார்கள் என்றும், அச்சுறுத்தும் அளவுக்கு வினாத்தாள் கடினமாக இல்லை என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த பிளஸ்2 கணித பாட ஆசிரியர் ஒருவரிடம் கேட்டோம். ''பொதுத்தேர்வுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்படும்போது, புத்தகத்தின் பயிற்சி வினாக்களில் இருந்து மட்டுமே அல்லாமல், புத்தகத்திற்கு வெளியில் இருந்தும் 28 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கேட்கப்படும்.


புத்தகத்தில் ஒரு பயிற்சி வினா இருந்தால், குறைந்தபட்சம் அந்த பயிற்சி வினாவில் உள்ள எண்களையாவது மாற்றி அமைத்துதான் வினாத்தாள் தயாரிக்கப்படும். வழக்கமாக ஒரு வினாவைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலை எழுதும்படி இல்லாமல், பதிலைச் சொல்லிவிட்டு அதற்குரிய வினாவைக் கண்டுபிடிக்கும் படியும் கூட ஒன்றிரண்டு வினாக்கள் வடிவமைக்கப்படும்.
ஒரு வகுப்பில் உள்ள சராசரி மாணவர்கள், சராசரிக்கும் குறைவாக உள்ளவர்கள், அதிக திறனுள்ளவர்கள் என அனைத்துத் தரப்பு மாணவர்களையும் கவனத்தில் கொண்டுதான் வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. அதன்படி, இப்போது பொதுத்தேர்வில் வழங்கப்பட்ட கணித வினாத்தாள் சரியான முறையில்தான் இருக்கிறது.


அதை கடினம் என்று சொல்லிவிட முடியாது. அதேநேரத்தில் மிக எளிமையும் கிடையாது.
எனினும், அரசுப்பள்ளிகளைப் பொருத்தவரையில், ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாக கவனித்து வந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். கணித தேர்வில் மூன்று 5 மதிப்பெண் வினாக்கள், இரண்டு 3 மதிப்பெண் வினாக்கள், மூன்று 2 மதிப்பெண் வினாக்களுக்கு அனைத்து தரப்பு மாணவர்களும் விடையளிக்கும் வகையில் எளிமையாக இருந்தன. தவிர, அகமதிப்பீட்டு முறையில் 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விடும். அதனால் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு.
என்றாலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும். ஆனால், பாடப்புத்தகத்தை முழுமையாக படித்திருக்கும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் வகையில்தான் வினாத்தாள் இருக்கிறது. மொத்தத்தில் கணித வினாத்தாள் அத்தனை மோசமாக இல்லை,'' என்றார் அந்த ஆசிரியர்.



மற்றொரு கணித பாட ஆசிரியர் கூறுகையில், ''பிளஸ்2 கணித வினாத்தாள் அதிக எளிமையும், அதிக கடினமும் இல்லாமல் மிதமாக (மாடரேட்) இருந்தது. மெல்ல கற்கும் மாணவர்கள்கூட தோல்வி அடைய வாய்ப்பில்லை. ஆனால், இந்தமுறை அதிக மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை குறையும். பொதுவாகவே நம் மாணவர்கள் பாடங்களை முழுமையாக படிப்பதில்லை. நுனிப்புல் மேயும் மாணவர்களால் எப்போதுமே நூற்றுக்கு நூறு பெற முடியாது. போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்தான் இப்போதுள்ள புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.



அதனால் திரும்பத்திரும்பக் கேட்கும் வினாக்களை தேர்ந்தெடுத்துப் படிப்பது, குறிப்பிட்ட பகுதியில் இருந்து வினாக்கள் வரும் என்பது போன்ற ஜாதகம் கணித்து கூறுவதெல்லாம் இனி நடக்காது. 9ம் வகுப்பில் இருந்தே முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் நோக்கமாக கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் பாடங்களை ஆழமாகப் பயிற்றுவிக்க வேண்டும். அப்போதுதான் பிளஸ்2வில் அவர்களால் கணித பாடத்திலும் எளிமையாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முடியும். தனியார் பள்ளிகளுக்கும் இப்போதுள்ள பாடத்திட்டம் சவாலானதுதான்,'' என்றார்.

No comments:

Post a Comment