Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 3, 2020

பிளஸ்2 தேர்வு தொடங்கியது: மொழிபாடத்தேர்வு எளிமை மாணவர்கள் மகிழ்ச்சி


சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மொழிப்பாடத் தேர்வு நடந்தது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத்தை எழுதினர். தேர்வில் இடம்பெற்ற கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.



தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் பாடத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் படித்த 8 லட்சத்து 16 ஆயிரம் மாணவ, மாணவியர் மேற்கண்ட 600 மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு எழுதினர். அவர்களில் ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்ற பழைய பாடத்திட்டம், ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறையில் பழைய பாடப்புத்தகத்தின் கீழும், புதிய பாடத்திட்டத்தில் புதிய பாடப்புத்தகத்தின் கீழ் என 3 பிரிவுகளை சேர்ந்த தனித் தேர்வர்கள் மொத்தம் 19166 பேர் எழுதினர்.


காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் காலை 9.30 மணிக்குள் தேர்வு மைய வளாகத்துக்குள் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகளை கண்காணிப்பாளர்கள் சோதனை நடத்தினர். ஹால்டிக்கெட், பேனா, பென்சில் உள்ளிட்ட தேர்வுக்கு தேவையான பொருட்கள் தவிர வேறு எந்த பொருளையும் தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. பெல்ட், ஷூ ஆகியவையும் அனுமதிக்கவில்லை. தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,012 தேர்வு மையங்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.




கேள்வித்தாள் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அதில் மாணவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. தேர்வு எழுத வந்திருந்த மாணவர்களின் போட்டோவுடன் கூடிய வருகைப் பதிவேடு தேர்வுத்துறை மூலம் தேர்வு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹால் டிக்கெட்டில் உள்ள மாணவர்கள் போட்டோவுடன் ஒத்துப் போகிறதா என்று சரி பார்த்து கண்காணிப்பாளர்கள் மாணவர்களிடம் கையெழுத்து பெற்றனர். மாற்றுத்திறனாளிகள், டிஸ்லெக்சியா போன்ற மாணவர்களுக்கு அனைத்து தேர்வு மையங்களிலும் கீழ் தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அதனால் அவர்கள் சிரமம் இல்லாமல் தேர்வு அறைக்கு செல்ல முடிந்தது. இதையடுத்து தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. மொழிப்பாடத் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஆங்கிலப்பாடத் தேர்வு 5ம் தேதி நடக்கிறது.




'சிறையில் தேர்வு எழுதிய 62 கைதிகள்'
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 62 கைதிகள் புழல் மத்திய சிறைச்சாலையில் தேர்வு எழுதினர். புழல் தண்டனை சிறைச்சாலையில் 16 பேரும், விசாரணை சிறையில் ஒருவரும், கோவை 13 பேர், மதுரை 4 பேர், பாளையங்கோட்டை 5 பேர், கடலூர் 6 பேர், சேலம் 5 பேர், திருச்சி 3 பேர், வேலூர் 4 பேர், புழல் மகளிர் பெண்கள் சிறையில் 3 பேர், வேலூர் மகளிர் சிறையில் 2 பேர் என மொத்தம் 62 பேர் நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் நடந்தது.




'தமிழ் தேர்வில் 11 பேர் பிட்'
தமிழகத்தில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத் தேர்வின் போது பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 11 மாணவர்கள் பிட் அடித்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிட் அடித்து சிக்கியோரில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 4, சென்னை 7, என மொத்தம் 11 பேர் அடங்குவர்.

No comments:

Post a Comment