Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 8, 2020

பள்ளி வளர்ச்சி நிதி முறையாக பயன்படுத்தப் படுகிறதா? கண்காணிக்க கோரக்கை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 56லட்சத்து 55ஆயிரத்து 628 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக தொடக்கப் பள்ளிகளில் 25லட்சத்து ஆயிரத்து 483 மாணவர்களும், 24லட்சத்து 67ஆயிரத்து 455 மாணவிகளும் பயின்று வருகின்றனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42லட்சத்து 86ஆயிரத்து 450 மாணவர்களும், 41 லட்சத்து 9ஆயிரத்து 752 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இப்படி பலலட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். என்று தமிழக அரசின் கணக்கீட்டின் படி தெரியவந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்காக பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து பள்ளிகளின் வளர்ச்சி நிதியாக அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, நலத்துறை பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதில் 1 முதல் 15 மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.12,500ம், 16 முதல் 100 மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு ரூ.25ஆயிரமும், 101 முதல் 250 மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.50ஆயிரமும், 251 முதல் 1,000 மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.75ஆயிரமும், 1,000க்கு மேல் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதில் 10 சதவீதம் நிதியை முழு சுகாதாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மொத்தம் சுமார் ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிதியினைக்கொண்டு பள்ளி வகுப்பறை, வளாகத்தை தூய்மை செய்தல், கழிவறை தூய்மை செய்தல், தூய்மையான குடிநீர் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளிகளில் இயங்காத நிலையில் உள்ள கற்றல் உபகரணங்கள் மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான நாளிதழ்கள், மின்கட்டணம், இணையதள வசதி, ஆய்வக உபகரணம் வாங்கவும் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிதியை பயன்படுத்துவதற்கு முன்பு பள்ளி மேலாண்மை குழுவினர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசனை செய்து இந்த ஆண்டு எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பின்னர் அதனை தீர்மானமாக பள்ளி மேலாண்மை குழு தீர்மான பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும். பின்பு தான் அந்த நிதியை கொண்டு செலவுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த நிதியின் மூலம் கொள்முதல் செய்யும் பொருட்கள் தரமானதாக வாங்க வேண்டும். இதனை மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கு செல்லும்போது முறையாக நிதி செலவிடப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த விதிமுறைகள் காகித வடிவில் மட்டுமே உள்ளதாக நேர்மையான ஆசிரியர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியினை முறையாக செலவு செய்வதில்லை. மாறாக குறைந்த விலையிலான உபகரணங்கள் வாங்கி அதிக தொகைக்கு பில் வைப்பதாகவும், சில பள்ளிகளில் எந்தவிதமான செலவும் செய்யாமல் பில் மட்டும் வைத்து கணக்கு காட்டி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அதோடு, பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள உறுப்பினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கிய ரூ.93 கோடி நிதியில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் ஆய்வுக்கு செல்கிறார்களா? சென்றாலும் உரிய முறையில் நிதி செலவிடப்பட்டுள்ளதா? என்று சரியான முறையில் ஆய்வு செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இப்படியாக அரசு பள்ளிகளுக்கான வளர்ச்சி நிதி பெரும்பாலும் கொள்ளையடிக்கப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே அரசு சார்பில் ஒதுக்கிய நிதி சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா? என்பதை கழுகுப்பார்வை கொண்டு ஆய்வு செய்து, விதிமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேர்மையான ஆசிரியர்களே கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும், பள்ளி வளர்ச்சி நிதி செலவிடப்பட்டுள்ளதா? முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment