Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 18, 2020

பள்ளியும் குழந்தைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்..

‘சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ... தமிழில் உண்டல்லோ?
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ஒன்றல்லோ... ரெண்டும் ஒன்றல்லோ?'
ஜீன்ஸ் படத்தில் வரும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகள். தமிழ் இலக்கணம் இரட்டைக்கிளவியில் சொற்களைப் பிரிக்க கூடாது. பிரித்தால் பொருள் தராது என்று தமிழ் இலக்கணத்தை வெள்ளித்திரையில் கொண்டுவந்திருப்பார் வைரமுத்து அவர்கள். அதேபோலதான் பள்ளியும் குழந்தைகளும் இரண்டையும் பிரிக்க மூடியாது.. பிரிக்கவும் கூடாது. பிரித்தால் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்குமே தவிர பயன் ஒன்றும் விளையாது. ஆனால் இன்று பள்ளிகள் சர்வாதிகாரத்தாலும், வெற்று மதிப்பெண்ணை நோக்கிய ஓட்டத்தாலும் பள்ளிக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி தோன்றவே செய்திருக்கிறது.



இன்று அதை நாம் உணர்ந்திருப்போம்.. பள்ளி திறந்து குழந்தைகள் இல்லாமல் இன்று நாம் செய்த பணி கண்டிப்பாக திருப்தியான பணியாக இருந்திருக்காது. நட்சத்திரம் இல்லாத வானம் போல பள்ளிக்கூடம் வெறுமையாக காட்சியளித்திருக்கும். வாசமில்லா வண்ண மலர்களைப்போல, வண்ணமில்லா வானவில்லைப்போல இன்றைய பள்ளிக்கூடம் சுவாரசியம் இல்லாமல் சென்றிருக்கும். பூக்கள் இல்லாத பூங்காக்கள் போல வெறிச்சோடி இருந்திருக்கும்.
பெருமழை அடித்து ஓய்ந்த வேளையில் ஒரு மயான அமைதி தோன்றுமே அது இன்று பள்ளியில் ஏற்பட்டிருக்கும். இன்று உணர்ந்திருப்போம்.
மாணவர்களால் நாம்.. மாணவர்களுக்காக நாம். மாணவர்கள் இல்லையேல் இன்று நாம் இல்லை. என்னதான் அவர்களைத் திட்டினாலும் அடித்தாலும் அவர்கள் தான் பள்ளிக்கு உயிர். அவ்வுயிர் இல்லாத பள்ளிகள் இன்று நமக்கும் பாடம் நடத்தியிருக்கும். எத்தனை வகுப்புகள் எத்தனை மாணவர்கள் எத்தனை பாடம் நடத்தியிருப்போம் ஆனால் வகுப்பறையில் இல்லாத மாணவர்கள் இன்று நமக்கு பாடம் நடத்தியிருப்பார்கள். எதுவும் நிலை கிடையாது இவ்வுலகில். இதோ கொஞ்ச காலம் பின்னால் சென்று பார்ப்போம்.


5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்று எவ்வளவு ஆர்ப்பாட்டம். பிஞ்சு மனதில் எத்தனை கஷ்டத்தை உண்டாக்கியிருப்போம். ஆனால் இன்று என்ன நடக்கிறது பாருங்கள்.. பள்ளிக்கூடமே இயங்கவில்லை. யாருக்கு தேர்வு என்று பயமுறுத்தினோமோ இன்று அவர்கள் ஜாலியாக விளையாடுகிறார்கள். ஆக நாளை என்பது நமக்கில்லை. இன்று இந்த நிமிடம் மட்டுமே நமக்கு சொந்தம். இன்றைக்காக வாழ்வோம்.. இன்றே வாழ்வோம்.. மகாத்மா காந்தி சொல்வார் “நாளையே இறந்து விடுவோம் என்று நற்செயல்கள் பல செய்திடுங்கள்.. சாவே கிடையாது என்று நினைத்து நிறைய படியுங்கள்.“
அதேபோல்தான் இந்த மாணவர்கள் இல்லா பள்ளியில் நாம் என்ன செய்யப்போகிறோம்? பலவிதமான கிண்டல்களும் கேலிகளும் இணையத்தை வலம் வருகின்றன. அப்ப நமக்கு கொரோனா வராதா? பள்ளியில் குழந்தைகள் இல்லாமல் நாம் என்ன செய்வது? யாரும் இல்லாத டீ க்கடையில் யாருக்கு டீ ஆற்ற? இப்படி பலவிதமான மீம்ஸ்கள் இரக்கை கட்டி பறக்கின்றன இணைய தளங்களில்.
தயவுசெய்து அப்படி ஒருபோதும் நினைக்காதீர்கள்.




1. மரம் வெட்டுபவன் கோடாரியைத் தீட்டும் நேரமாக எடுத்துக்கொள்ளலாம்..
2. எந்த பாடங்களை எப்படி நடத்தினால் குறிப்பிட்ட அநத கற்றல் விளைவை அடைய முடியும் என்று சக ஆசிரியர்களோடு கலந்துரையாடலாம்..
3. கடந்த கால பள்ளியின சாதனைகளை துண்டுதாளில் அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம்.
4. அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தால் வரும் சலுகைகளை அடிக்கோட்டிட்டு காண்பிக்கலாம்.
5. சாதனைகளை பெரிய பதாகைகளில் பள்ளியின் முன் வைத்து பள்ளி சேர்க்கைக்கு இப்போதே வித்திடலாம்.
6. பள்ளி புரவலர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கலாம்..
7. அருகில் உள்ள பள்ளிசார் வாழ்விடங்களுக்கு அப்படியே கால்நடையாக சென்று நம்குழந்தைகைளைக் கண்டு வாருங்கள். அவர்களிடம பேசுங்கள். வீடுகளில் பெற்றோர்களைச் சந்தியுங்கள். ஏதேனும் அவர்களுக்கு வழிகாட்டல் தேவையென்றால் தயங்காமல் செய்யலாம்.
8. நம் மாணவர்களின் உடன்பிறந்தவர்கள் அதான் நம் பள்ளி முன்னாள் மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுங்கள். ஒருவேளை அவர்கள் வேலையிலிருந்தால் பள்ளிக்கு ஏதேனும் உதவி கேக்கலாம்.



9. நூறுநாள் வேலை திட்டம் நடந்தால் குறிப்பிட்ட பஞ்சாயத்தை அணுகி அந்த பணியாளர்களை ஒரு நாள் பள்ளியைச் சுத்தப்படுத்த கேக்கலாம்…
10. பள்ளியைச்சுற்றி மரக்கன்றுகளை நட்டு சொட்டுநீர்ப்பாசனத்திற்கு ஏற்பாடு செய்யலாம்...
11. மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ட கற்றல் வளங்களைக் கண்டறிந் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். சமயம் வரும்போது பயன்படுத்தலாம்.
12. மாதிரி வினாத்தாள்கள் தயாரித்து வையுங்கள். தேர்வு நேரங்களில பயன்படுத்தலாம்.
13. குப்பைகளைப பிரித்தெடுக்க குப்பைக் கூடைகள் வைக்கும்மிடத்தில் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என பதாகைகளில் எழுதி மாணவர்கள் பார்வையில் படுமாறு வைக்கவலாம்..
14. “சுத்தம் சோறு பாடும் சுகாதாரம் நோயைக்காக்கும்“ “கையைக் கழுவினால் காணாமல் போகும் வைரஸ்“ இப்படி நிறைய எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. மாணவர்களிடம் சேர்க்கலாம்.



15. பள்ளியில் மின்கம்பங்கள்.. மின் இமணைப்புகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய பணியாளர்களை அழைத்து சரிசெய்யலாம்.
16. பாடநூலில் உள்ள பாடங்களில் இதைச் சேர்க்கலாம்… இணைய வளங்களில் இதை வைக்கலாம் என்று பட்டியல்கள் இட்டு வைக்கலாம். என்றாவது வாய்ப்பு வரும்போது பயன்படுத்தலாம்.
17. இதுவரையில் சென்ற பயிற்சிகள் .. அந்த பயிற்சிகளில் பெற்ற நுணுக்கங்கள் குறித்து ஒரு குறிப்பேட்டில் எழுதலாம். அதை வகுப்பறையில் நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை எழுதி வைக்கலாம்.
18. மெல்லமலரும் குழந்தைகளுக்கு எப்படி கற்பித்தல் பணியில் ஈடுபடுவது.. மீத்திறன் மிக்க மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்று ஆலோசிக்கலாம்.
19. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பிடம் போன்றவற்றை ஏற்படுத்த, சுத்தம் செய்ய, பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கலாம்.



20. நீண்ட நாட்களாக பள்ளியில நிலவிரும் ஏதோ ஒரு பிரச்சினையைத தீர்க்க அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசிக்கலாம்.
21. பள்ளிக்கும் அந்த சமூகத்திற்கும் ஏதேனும் பிரச்சினைகள் என்றால் அதைத தீர்க்க அனைவரும் ஒன்றுகூடி ஆலோசிக்கலாம்.
22. சில பாடங்கள் நமக்கு கடினமாக இருக்கும். ஆனால் இன்னொருவருக்கு எளிதாக இருக்கும். இப்படி உள்ள தகவல்களை அருகில் இருக்கும் ஆசிரியர்களிடம் பேசி எளிமைப்படுத்தலாம்.
23. EMIS போன்ற மாணவர் சார்ந்த இணையதகவல்கள், ஆசிரியர் சார்ந்த தகவல்கள் அனைத்தையும் சரிபார்த்து திருத்தம் செய்யலாம்.
24. மாணவர் வகுப்பறைகளில் உள்ள தரைதளங்களைச் சீர செய்யலாம். இப்ப குறைந்த விலைகளில் தரைவிரிப்புகள் வந்து டைல்ஸ் ஒட்டியது போலவே காணப்படும். அப்படி செய்யலாம்.
25. விளையாட்டு மைதாளங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்காவது இடத்தை தேர்வு செய்து அதற்குரிய கருவிகள் வாங்கி அந்த குறிப்பிட்ட விளையாட்டில் உங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கலாம்.



இப்படி இன்னும் எத்தனையோ “லாம்“ களை என்னால் சொல்ல முடியும்.. இத்தனை லாம்களை செய்யமுடியுமா? என்று நினைக்காதீர்கள். நாம் மனது வைத்தால் எதனையும் செய்து காட்ட முடியும். இந்த விடுமுறைநாட்களை பயனுள்ள வகையில் கழிப்போம்.
ஏனென்றால் மாணவர்களால் நாம் மாணவர்களுக்காக நாம்…..
இப்படி பொதுக்காரியங்களுக்கு இறங்கும்பொது பல தடைகள் வரும்.. அது பள்ளித்தலைமை ஆசிரிராக இருக்கலாம். உடன் பணிபுரியும் இன்னொரு ஆசிரியராக இருக்கலாம்….சமூகமாக இருக்கலாம்.. கல்வி அலுவலர்களாக இருக்கலாம். உங்களுக்கு ஏன் வீண்வேலை என்று செல்லமாக திட்டும் வீட்டாளாக இருக்கலாம்? ஏன்டா மாப்ள நமக்கு இந்த வேலை வா போய்….. என்று அழைத்து செல்லும் நண்பர்கள் இருக்கலாம். நம் பணியைக் கண்டு கிண்டல் கேலி பண்ணலாம்.. சிரிக்கலாம். இவரு பெரிய அப்பா டக்கரு அப்படியே அரசுப்பள்ளிய தூக்கி நிறுத்த போறாரு அட போங்க சார் என்று கமெண்ட் வரலாம்.


( இது வரும் கண்டிப்பாக) அப்பலாம் “ஆசிரியப்பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி “ என்ற சொற்றொடர் நினைவுக்கு வந்து நாம் நம் பள்ளி பிள்ளைகளுக்கு செய்தால் நம் பிள்ளைகளுக்கு வேறு யாரோ உதவுவார்கள். என்ற எண்ணம் எழட்டும். அடுத்து விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். அது வீணர்களின் வேடிக்கை செயல். இந்த வாழ்வு மகத்தானது ஒருமுறைதான்.. கடைசிகாலத்தில் நெற்றிபொட்டில் வைக்கும் ஒரு ரூபாய் கூட நமக்கில்லை. இதோ கொரோனா வைரஸ் நிரூபித்து கொண்டிருக்கிறது.. சாதி பார்க்கமால், மதம் பார்க்காமல் இன்று உலகம் முழுக்க பரவி வாழ்வின் நிலையாமையை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்றைய வாழ்வு நமக்கு இந்த நிமிடம் மட்டுமே சொந்தம்.. நாளை நமக்கில்லை… ஆகவே இருக்கும் அந்த ஒற்றை வாழ்வில் நல்லதை செய்வோம்.. நல்லதே நினைப்போம்…
ஏனென்றால் “ மாணவர்களால் நாம்.. மாணவர்களுக்காக நாம்"

நன்றி… ஆலோசனைகளுக்கு … பாலகிருஷ்ணன்.
824 834 03 05, 96 98 99 58 53 ( வாட்ஸ் அப்)
muthubala1984@gmail.com

No comments:

Post a Comment