Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 20, 2020

பள்ளித் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக வரும் மார்ச் 23 ஆம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் முந்தைய அமர்வில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதில், கிருமிநாசினி அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



அறிக்கையில், தமிழக அரசிடம் போதுமான அளவு முகக்கவசம் இருப்பதாகவும், கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த விரைவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், 10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது என்று குறிப்பிட்டார். பின்னர் நீதிபதிகள், கரோனா நடவடிக்கைகள் குறித்த அறிக்கையுடன் பள்ளித் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாகவும் மார்ச் 23-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment