தன்மேம்பாட்டுரை அணி

15. தன்மேம்பாட்டுரை அணி

தன்னைத் தானே புகழ்ந்துரைப்பது தன்மேம்பாட்டுரை அணி எனப்படும்.

     தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.  - தண்டியலங்காரம், 71

(.கா.)
     எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு
     அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப்
     பேராதவர் ஆகத் தன்றிப் பிறர்முதுகில்
     சாராஎன் கையில் சரம். -(தண்டியலங்கார மேற்கோள்)


பாடலின்பொருள்:


வீரன் ஒருவன் தன் ஆற்றலையும் வீரப்பண்பையும் வெளிப்படுத்தி உரைக்கிறான். போரில் எனக்கெதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பியோர் எவருமில்லை; ஆகவே எனக்கு அஞ்சியவர்கள் அச்சமில்லாமல் திரும்பிப் போய்விடலாம். நான் எய்யும் அம்புகள் போரில் எதிர்த்து நிற்பவர்கள் மார்பில் பாயுமே தவிரப் புறங்காட்டிச் செல்வோர் முதுகுகளில் பாயமாட்டா. இப்பாடலில் தன்னைத்தானே வீரன் புகழ்ந்து கொள்வது வெளிப்படுகிறது.
Share:

Categories