Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 29, 2018

ஜூலை 10- க்கு பின் பி.இ. கலந்தாய்வு: அமைச்சர் கே.பி.அன்பழகன்

எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு ஜூலை 10-ஆம் தேதி முடிந்த பிறகே பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்படும். எனவே, பி.இ. கலந்தாய்வு நடத்த கூடுதல் அவகாசம் கோரியும், முதலாமாண்டு வகுப்புகளைத் தாமதமாகத் தொடங்கவும் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

பி.இ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடித்து, பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4-ஆம் வாரத்தில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பி.இ. கலந்தாய்வைத் தொடங்கி ஜூலை 30- ஆம் தேதிக்குள் முடித்துவிடும். 



ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.-பி.இ. இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கின்றனர்; எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு முதலில் தொடங்கியவுடன் அதில் சேர்ந்து விட்டு, பி.இ. படிப்பைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து விடுகின்றனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக பி.இ. படிப்பில் சேராமல் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் கலந்தாய்வின் சாதக அம்சம்: இதனால், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் போன்ற முன்னுரிமை பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 500-க்கும் அதிகமான இடங்கள் காலியாகவே விடப்படுவது தொடர்கதையாகி வந்தது. இதே போன்று அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எம்ஐடி ஆகிய மூன்று கல்லூரிகளிலும் கடந்த ஆண்டு 400 இடங்கள் காலியாக விடப்பட்டன.
இந்த நிலையை மாற்றும் வகையில், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சென்றாலும் அவர்கள் தேர்வு செய்த இடங்களில் அடுத்தடுத்து வரிசையில் இருக்கும் மாணவர்கள் வந்துவிடும் வகையில் ஆன்-லைன் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்துள்ளது.
தாமதம் ஏன்?: இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 10 ஆம் தேதிதான் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக, ஜூலை 6 ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த பி.இ. கலந்தாய்வு தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது: பி.இ. கலந்தாய்வை நடத்த 30 முதல் 35 நாள்கள் தேவை. ஆன்-லைன் கலந்தாய்வு 5 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளன. ஒரு சுற்றுக்கு 5 நாள்கள் வீதம் 25 நாள்கள் தேவைப்படும். அதோடு, இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு கல்லூரியில் சேர கால அவகாசம் அளிப்பது போன்ற காரணங்களால் குறைந்தபட்சம் 30 நாள்களாவது தேவைப்படும். 




எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி முடிந்த பிறகே, பி.இ. கலந்தாய்வு தொடங்க முடியும் என்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி முதலாம் ஆண்டு பி.இ. வகுப்புகளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்குவது இயலாத காரியம். எனவே, கூடுதல் கால அவகாசத்துக்கு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்படும்.

கட்டணம் எவ்வளவு?: பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் மாணவர்கள் தரச் சான்று பெற்ற படிப்புகளுக்கு ரூ. 55 ஆயிரம் ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். தரச்சான்று இல்லாத படிப்புகளுக்கு ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும். அதுபோல, நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் தரச் சான்று பெற்ற படிப்புகளுக்கு ரூ. 87 ஆயிரம் ஆண்டுக் கட்டணமும், தரச்சான்று இல்லாத படிப்புகளுக்கு ரூ. 85 ஆயிரமும் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். 

இந்தக் கட்டணத்தை மீறி வசூலிக்கும் கல்லூரிகள் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஆய்வு செய்வதற்கான தமிழ்நாடு கட்டணக் குழு விரைவில் அமைக்கப்படும். 

பி.ஆர்க். கலந்தாய்வு எப்போது?: தமிழகத்தில் 49 கல்லூரிகளில் வழங்கப்படும் பி.ஆர்க். சேர்க்கைக்கான கலந்தாய்வு தனியாக நடத்தப்படும். வரும் ஜூலை 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், இதற்கான கலந்தாய்வு தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.




தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நாடா') மதிப்பெண் அடிப்படையிலேயே பி.ஆர்க். சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு 3,379 பேர் மட்டுமே இதற்குத் தகுதி பெற்றுள்ளனர். சுயநிதி பி.ஆர்க். கல்லூரிகள், காலியாகும் பி.ஆர்க். இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்த கடந்த ஆண்டைப் போல தமிழக அளவிலான தகுதித் தேர்வை (டி.என்.நாடா') நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அளவிலான தேர்வு நடத்துவது குறித்தும் ஜூலை 2- ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.