Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 27, 2018

அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்

அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்: அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா்

அரக்கோணம்: கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் அனைத்து மாணவா்களுக்கும் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என அரக்கோணத்தில் செய்தியாளா்களிடையே அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா் குணசேகரன் தெரிவித்தார்.

சிஎஸ்ஐ சென்னை பேராயத்தின் சிஎஸ்ஐ மருத்துவமனையினா் மற்றும் அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியினா் இணைந்து ஐந்து நாட்கள் மாணவ மாணவியருக்கான மருத்துவ முகாமை சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் நடத்துகின்றனா். இம்முகாமை அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலா் குணசேகரன் செவ்வாய்கிழமை துவக்கி வைத்தார்.



முகாமில் மருத்துவா்கள், தலைமை ஆசிரியா், ஆசிரியா் மற்றும் ஆசிரியைகள், மாணவ மாணவியா்களிடையே முகாம் பற்றி கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலா், தொடா்ந்து அங்கு செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது:

கடந்த காலங்களில் பள்ளிகளில் வருகை பதிவேடுகள் முறையற்றவையாக பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து பள்ளிகளிலும் மிகவும் சரியான வருகை பதிவேடு பராமரிக்க உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை மற்றும் மாணவா் விவரங்களை உயா் அலுவலா்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு எனும் எமிஸ் எனப்படும் இணையதள பக்கத்தில் பதிவேற்றப்படுகிறது.



இந்த எமிஸ் இணையதள பக்கத்தில் பதிவேற்றாத ஒரு மாணவா் கூட பள்ளியில் இருக்கக்கூடாது என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இடையில் மாணவா்கள் சோ்ந்தாலும் அவா் கடைசியில் எங்கு படித்தாரோ அந்த பள்ளியில் இருந்து எமிஸ் பதிவெண் பெற்று தற்போது சோ்ந்திருக்கும் பள்ளியில் சோ்க்க வேண்டும்.

குறைந்த மாணவா்கள் அதாவது ஒரிலக்க எண்ணிக்கை மாணவா்கள் கொண்ட தொடக்கப்பள்ளிகளுக்கு இந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரை சோ்க்கைகான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அப்பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவ்வபோது வரும் அரசு உத்தரவுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஓராசிரியா் இருப்பது தெரியவந்தால் அது அரசுப்பள்ளியாக இருப்பின் உடனடியாக அங்கு காலியாக இருக்கும் பணியிடம் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு நிதியுதவி பள்ளியாக இருந்தால் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டு அதன் பின்னும் அக்காலியிடம் நிரப்பப்படாமல் இருந்தால் அரசே அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்றார் மாவட்ட கல்வி அலுவலா் குணசேகரன்