
ஈ, தா, கொடு என்பன நமக்கு ஒரே பொருளைத் தருவன போலவே தோன்றும். இதுநாள்வரை நாமும் இதன் பொருளும் அறியாமல் நம்மில் சிலர் பயன்படுத்தியும் வந்துள்ளோம்.
ஆனால் நம் தமிழ் இலக்கண ஆசான் தொல்காப்பியர், அவற்றை முறையே பொருளுடன் தொடர்புபடுத்திப் பிரித்துக்காட்டியுள்ளார். அதனை இங்கு விரிவாகக் காண்போம்.
ஈ:
உயர்நிலை மனிதர்கள் அல்லது செல்வம் படைத்தவர்களிடம்
தாழ்ந்த நிலையில் இருக்கும் மனிதர்கள் யாசகமாய்க் கேட்கும் செயலில் பயன்படும் சொல்லாட்சிக்கு ஈ என்று பெயர்.
உயர்நிலையில் இருப்பவர்கள் உயர்நிலை மனிதர்களிடமும், தாழ்நிலையில் இருப்போர் தாழ்நிலை மனிதர்களிடமும் கேட்டுப்பெறும் செயல்பாட்டுக்கு தா எனும் சொல்லாட்சி பயன்படுகிறது. சுருக்கமாக தனக்கு நிகரானவர்களிடம் கேட்டுப் பெறும் சூழ்நிலையில் இச்சொல்லாட்சியைப் பயன்படுத்தலாம்.
கொடு:
தாழ்நிலையில் உள்ள மனிதர்களிடம், உயர்நிலையில் இருக்கும் மனிதர்கள் சற்று அதிகார தோரணையில் கேட்டுப்பெறுவதற்குக் கொடு எனும் சொல்லாட்சி பயன்படுத்தப்படுகிறது.
எனவே, இத்தகைய சொற்களை அதன் உள்ளார்ந்தபொருள் மாறுபாடுகளுடன்
கற்று உணர்தல் சிறப்பாக இருக்குமல்லவா.?
இனி வரும் காலங்களில் மேற்கூறிய சொற்களை அதற்குப் பொருத்தமான சூழலில் மட்டுமே பயன்படுத்தி நம் மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்.