Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 20, 2018

செயலி மூலம் தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல். அறிமுகம்


பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (தமிழ்நாடு) தலைமை பொதுமேலாளர் ஆர்.மார்ஷல் அந்தோனி லியோ சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



இந்தியாவில் முதல்முறையாக அதி நவீன என்.ஜி.என். (அடுத்த தலைமுறை நெட்வொர்க்) மூலம் இணையதள தொலைபேசி வசதியை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக ‘விங்ஸ்’ என்ற பெயரில் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போன், கம்ப்யூட்டர், ‘லேப்-டாப்’ போன்றவற்றில் பதிவிறக்கம் செய்து, இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகளை இலவசமாக ஏற்கவும், பேசவும் முடிவும்.

குறுந்தகவல் அனுப்ப முடியாது

‘வாட்ஸ்-அப்’பில் குரல் அழைப்பு விடுக்கிற போது, இருதரப்பிலும் ‘டேட்டா’ அல்லது ‘வை-பை’ வசதி நிச்சயம் இருக்க வேண்டும். ‘விங்ஸ்’ ஆப் வைத்திருக்கும் நபரிடம் ‘டேட்டா’ அல்லது ‘வை-பை’ வசதி இருந்தால் மட்டுமே போதுமானது, மறுமுனைக்கு குரல் அழைப்பு தானாக சென்றுவிடும். ஆனால் ‘விங்ஸ்’ ஆப் மூலம் குறுந்தகவல், படங்கள், ‘வீடியோ’ போன்றவற்றை அனுப்பவும், பகிரவும் முடியாது.

ஆண்டு கட்டணம் எவ்வளவு?



‘விங்ஸ் ஆப்’ சேவையை வருகிற 25-ந் தேதி முதல் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக bsnl.co.in என்ற ‘ஆன்-லைன்’ முகவரியில் அல்லது பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆதார் கார்டு எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த புதிய சேவையை பெறுதற்கு ஓராண்டு கட்டணமாக ரூ.1,099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்துடன் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் நம்பர் போன்று 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் ‘இ-மெயில்’ (மின் அஞ்சல்) முகவரிக்கு 16 இலக்க ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும்.

அந்த ரகசிய எண்ணை ngn.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், ‘விங்க் ஆப்’ செயல்பட தொடங்கும்.