பி.இ. துணைக் கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பி.இ. துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் வியாழக்கிழமை (ஆக.16) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் பொறியியல் இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதற்கு வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ஆம் கடைசி நாளாகும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்சிஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. கடன் அட்டை, பற்று அட்டைகள் மூலமாக ஆன்-லைனிலேயே கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது வரைவோலையாக எடுத்து, அருகில் உள்ள கலந்தாய்வு உதவி மையத்தில் செலுத்தலாம்.

சென்னை மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையத்தில் மட்டுமே அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கொண்டுவரவேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை www.annauniv.edu http://tnea.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 



சந்தேகங்களுக்கு 044 - 22359901 - 20 தொலைபேசி எண்களையும், 18004259779 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
Share:

Total Pageviews

Categories