Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 10, 2018

மாதம் ரூ.10,000க்கும் அதிகமாக ஊதியமா?: மத்திய அரசின் மருத்துவ காப்பீடு இல்லை


மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள் சொந்தமாக இருந்தாலோ, அந்த குடும்பம், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு வரம்புக்குள்வராது.



பிரதமர் நரேந்திர மோடியால் அண்மையில் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பான தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஹெச்.ஏ.), மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குடும்பம் ஒன்றின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, பிரிட்ஜ், மோட்டார் சைக்கிள் ஆகியவை சொந்தமாக இருந்தாலோ, அந்த குடும்பங்கள் மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு வரம்புக்குள் வராது.

2, 3 அல்லது 4 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகனங்கள், மீன்பிடி படகுகள், 3 அல்லது 4 சக்கர விவசாய வாகனம், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்பில் விவசாய கடன் அட்டை, தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர், அரசு ஊழியர், வருமான வரி, வர்த்தக வரி செலுத்துவோரும், விவசாயம் சாராத நிறுவனங்களும் இந்த வரம்புக்குள் வர மாட்டார்கள்.



2.5 ஏக்கருக்கும் அதிகமாக பாசன நிலம் மற்றும் பாசன உபகரணங்கள் வைத்திருப்போர், 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமாக பாசன நிலம் ஆகியவற்றை 2 அல்லது அதற்கும் அதிகமான பயிர் பருவங்களில் வைத்திருப்போர், 7.5 ஏக்கர் நிலம் மற்றும் பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் ஆகியோரும் தேசிய மருத்துவ காப்பீடு திட்ட வரம்புக்குள் வர மாட்டார்கள். இத்தகைய குடும்பத்தினரை தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து மாநிலங்கள் நீக்கிவிட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது