Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 20, 2018

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி: அக்.22ல் ஆலோசனை!!


அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,  வரும் அக்டோபர் 22ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.



ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு மக்கள் குடிநீர் மற்றும் விவசாயப் பாசன வசதிகள் வேண்டுமென்று, நீண்டநாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கீழ்பவானி கால்வாயில் இருந்து கசிவுநீரை, குழாய் மூலமாக முருங்கத்தொழுவு குளத்தில் நிரப்பும் பணியை மேற்கொண்டது தமிழக அரசு. இதற்காக, சுமார் 6 கி.மீ. தூரத்துக்குக் குழாய் பதிக்கப்பட்டது. சோலார் மின்தகடுகள் மூலமாக, இத்திட்டத்திற்கான மின்சக்தியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, இன்று (அக்டோபர் 20) இதற்கான தொடக்கவிழா நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.



இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அப்போது, தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

“அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுவதற்கான ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் தலைமையில் வரும் 22ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. சமூகநலத் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்யுமாறு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும். பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதில், தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் படிக்கும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.