Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 25, 2018

அரசுப் பள்ளியில் நெகிழ்ச்சியான தீபாவளிக் கொண்டாட்டம்-அனைத்து மாணவர்களுக்கும் புத்தாடை வழங்கிய ஆசிரியை


கடலூர் மாவட்டம், கிள்ளை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 படிக்கிறார்கள். இந்தக் குழந்தைகளின் பெற்றோர், அன்றாட கூலி வேலை செய்தால்தான் உணவு. அதனால், எந்த ஒரு பண்டிகையையும் பெரிதாகக் கொண்டாடாத இந்த மாணவர்களின் ஏக்கத்தை, பள்ளியின் ஆசிரியை சசிகலா நிவர்த்திசெய்துள்ளார். பள்ளியில் நடந்த அந்தத் தீபாவளிக் கொண்டாட்ட தருணத்தைப் பகிர்கிறார்.



"ஒவ்வொரு வருடமும் பண்டிகை நேரத்தில் மாணவர்களிடம் பேசும்போது, 'பெற்றோர், தினமும் வேலைக்குப் போனால்தான் நாங்க சாப்பிடவே முடியும். எந்தப் பண்டிகைக்கும் புதுத்துணி வாங்கித் தர மாட்டாங்க. பண்டிகைகளையும் கொண்டாட மாட்டோம்'னு சொல்வாங்க. அப்போதெல்லாம் மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். 

இந்த வருஷம் அந்த நிலையை மாற்ற நினைச்சேன். வேறொரு அரசுப் பள்ளி ஆசிரியரான என் கணவரிடம் சொன்னேன். 'இந்த வருஷம் எல்லாக் குழந்தைகளுக்கும் புதுத்துணி வாங்கிக்கொடுத்தால் நல்லா இருக்கும், அதுக்கு நிறைய செலவாகும். நாமும் பண உதவி செய்வோம்'னு சொன்னதும், 'நான் முயற்சி பண்றேன்'னு சொன்னார். 

எங்க பங்காக 20,000 ரூபாயுடன், கணவர் நண்பர்களும் உதவிசெய்ய, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சேர்ந்துச்சு. மாணவர்களுக்கு பேன்ட், சர்ட் மற்றும் மாணவிகளுக்கு சுடிதார் என எல்லாக் குழந்தைகளுக்கும் டிரெஸ் எடுத்தோம். 'புத்தாடை வழங்கும் விழா'னு நேற்று முன்தினம் பள்ளியில் விழா நடத்தினோம். எல்லா மாணவர்களும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிச்சு, பலகாரம் சாப்பிட்டு ஆனந்தமாக தீபாவளியைக் கொண்டாடினாங்க. 



'டீச்சர், இந்த டிரெஸ் நல்லா இருக்கா'னு கேட்டு பிள்ளைகள் மகிழ்ந்ததைப் பார்க்க நெகிழ்ச்சியா இருந்துச்சு. பிள்ளைகளின் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. வரும் தீபாவளி பண்டிகைக்கு அந்த ஆடைகளை மறுபடியும் போட்டுட்டு பண்டிகையைக் கொண்டாடுவோம்னு சொல்லியிருக்காங்க" எனப் பூரிக்கிறார் சசிகலா