கிராமப்புறப் பள்ளிகளில் ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளுக்கு இணையதள இணைப்பு கிடைக்காததால் செயலியில் மாணவ, மாணவியரின் வருகைப் பதிவை இணையவழியில் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் வருகைப் பதிவை இணைய வழியில் பதிவு செய்வதற்காக தமிழக அரசின் கல்வித் துறை செயலியை அறிமுகம் செய்தது.
இந்த செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் தினமும் மாணவ, மாணவியரின் வருகைப் பதிவை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை நகரப் பகுதிகளைவிட கிராமப் பகுதிகளில் அரசுப் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இதில், பல கிராமங்களுக்கு இன்று வரை இணையதள வசதி ஏற்படுத்தப்படவில்லை. கிராமங்களில் பல நேரங்களில் செல்லிடப்பேசிக்கு தேவையான இணையதள வசதியே கிடைப்பதில்லை.
இந்நிலையில், பல ஆசிரியர்கள் குறிப்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள் இல்லாமல் சாதாரண செல்லிடப்பேசிகளை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களால் மாணவ, மாணவியரின் வருகையை பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுதவிர ஸ்மார்ட் செல்லிடப்பேசி வைத்திருக்கும் ஆசிரியர்களும் அவர்களது பள்ளி இருக்கும் பகுதியில் இணையதள இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரக்கோணம் வட்டாரத் தலைவர் ஜி.சதீஷ்குமார் கூறியது: தற்போது இணையதள இணைப்பு பல கிராமங்களில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் செயலி சரிவர செயல்படுவதில்லை.
ஏற்கெனவே சத்துணவு உண்ணும் மாணவர்களின் வருகை குறித்து குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு வந்துள்ளது. இதற்கே சிரமப்பட்டு வருகிறோம்.
தற்போது வருகைப் பதிவும் இணையவழியில் அனுப்ப உத்தரவு வந்துள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இரண்டையும் ஒன்றிணைத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
மேலும், பல ஆசிரியர்களிடம் ஸ்மார்ட் செல்லிடப்பேசி இல்லை. எனவே அரசு, தலைமை ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் செல்லிடப்பேசியை வழங்க வேண்டும். மேலும், வருகைப் பதிவு செயலியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment