Thursday, January 3, 2019

குடும்ப அட்டைக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு!: சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பு


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.



எனினும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அங்கு இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஆண்டின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி புதன்கிழமை தொடங்கி வைத்தார். அவரது உரையின் விவரம்:
காவிரி வடிநிலப் பகுதிகளில் கஜா புயலால் ஏற்பட்ட தாக்கத்தையும், வட மாவட்டங்களில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சியின் தாக்கத்தையும் தமிழக அரசு கருத்தில் கொண்டுள்ளது. இச் சூழ்நிலையில், பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு அடங்கிய சிறப்புத் தொகுப்பை அரசு வழங்கவுள்ளது.



ஆயிரம் ரூபாய்: திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, அந்த விதிகளுக்கு உள்பட்டு திருவாரூர் மாவட்டம் தவிர்த்து, பிற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட ஆயிரம் ரூபாய் அரசால் அளிக்கப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக உடனடியாக ரூ.2,709 கோடி நிவாரண உதவி வழங்குமாறும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.15,190 கோடி தேவை என்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததை சுட்டிக்காட்டிய ஆளுநர், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ.900 கோடி விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். புயல் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் மறுவாழ்வுக்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் கூடுதல் நிதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.



மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்துடனும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துடனும் சர்ச்சை நீடித்து வருவதைக் குறிப்பிட்ட ஆளுநர், இது குறித்து தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.




ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி: மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான விரிவாக்கத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் போக்குவரத்துடன் ஒருங்கிணைந்த பலதரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் இணைக்கப்படும். இதற்கென தனி சட்டம் மற்றும் விதிகள் உருவாக்கப்படும். இவ்விதிகள் வரும் 16-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்படும்.




பழங்குடியினர் எழுத்தறிவு நிலை: மாநிலத்தின் சராசரி எழுத்தறிவு நிலையைக் காட்டிலும் பழங்குடியினரின் எழுத்தறிவு நிலை குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே உள்ளது. எனவே, பழங்குடியின மாணவர்கள் வாழும் உட்புறப் பகுதிகளில் பள்ளிகளைத் துவக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
தொழில் துறைக்கு தமிழக அரசு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது. மேலும், பாதுகாப்பு தளவாடங்களையும் வானூர்தி சாதனங்களையும் தயாரிப்பதை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.




புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தொடக்கத் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், புதிய கொள்கையை அரசு விரைவில் வெளியிடும்.