
மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை 2019 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்த முடிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இவற்றில் ஒரு கல்லூரி மட்டும் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளது. மீதமுள்ள 17 கல்லூரிகள், கால அவகாசம் முடிந்த பிறகும் எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இதன் மூலம் 2019-20 கல்வியாண்டில் இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது என்றனர் பல்கலைக்கழக அதிகாரிகள்.
ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்) புள்ளி விவரத்தின்படி, 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. 2016-17 இந்த எண்ணிக்கை 527 ஆகக் குறைந்தது. 2017-18 ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 523 ஆக மாறியது.
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டில் தகவல்தொழில்நுட்பத் துறை மீண்டும் மேம்படத் தொடங்கியது. தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வம் மீண்டும் எழுந்தது. இதன் காரணமாக, 2018-19 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை மீண்டும் 533 என்ற நிலையை எட்டியது.
ஏஐசிடிஇ புதிய நடைமுறை: தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் இந்த நிலை நீடிப்பதைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் புதிய முறைகளை ஏஐசிடிஇ கொண்டுவந்துள்ளது.
இதற்கென ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரைகளையும் ஏஐசிடிஇ ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை. பாரம்பரிய பொறியியல் துறைகளுக்கு அல்லாமல் வளர்ந்து வரும் துறைகளில் மட்டும் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்குவது என ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், 2019-20 கல்வியாண்டு அனுமதி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க ஜனவரி 19 கடைசி தேதி என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
அனுமதி நீட்டிப்புக்கு கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், 17 பொறியியல் கல்லூரிகள் எந்தவொரு விண்ணப்பத்தையும் பல்கலைக்கத்திடம் சமர்ப்பிக்கவில்லை. ஒரு பொறியியல் கல்லூரி மட்டும், மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்திக்கொள்ள விண்ணப்பத்திருக்கிறது என்றார்.
பல்கலைக்கழகத்திடம் எந்தவொரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லையெனில், அனுமதி நீட்டிப்பு கிடைக்காது. எனவே, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்காத 17 கல்லூரிகள் உள்பட 18 பொறியியல் கல்லூரிகளிலும் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
கடந்த 2018-19 கல்வியாண்டில் 2 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இதுபோல பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம் எதையும் சமர்ப்பிக்காமல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்
Join Our WhatsApp Group Click Here
Join Our Facebook Page Click Here





