Subscribe Us

Monday, March 23, 2026

பொதுத்தேர்வு கண்காணிப்பு பணி - 5 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வானது வருகிற 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 108 தேர்வு மையங்களில் நடைபெற்று வரும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதி வருகின்றனர்.

இத்தேர்வை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள். துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 2,995 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளிகள்) மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் தனித்தனியாக பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அக்குழுவை சேர்ந்த 135 பேர், கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வேதியியல் பாடத்தேர்வு நடைபெற்றது. அப்போது விழுப்புரம் நகரில் உள்ள 2 தனியார் பள்ளி தேர்வு மையங்களில், மாவட்ட கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்ட பறக்கும் படை குழுவினர் கண்காணிப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், அத்தேர்வு மையங்களில் மாணவர்கள், துண்டுச்சீட்டு பார்த்து எழுதி காப்பியடிப்பதை கண்காணிக்க தவறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய அவர், மாணவர்களை கண்காணிக்க தவறிய 3 ஆசிரியர் கள், 2 ஆசிரியைகள் என 5 பேரிடம், இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அந்த ஆசிரியர்கள் 5 பேரும், பறக்கும் படை குழுவிற்கான பணி யில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, இவர்கள் மீதான புகார் பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விசாரணைக்குப்பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed