
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்களும் வருகிற திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் குதிக்கிறார்கள். 2 நாளில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு அவர்கள் கெடு விதித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல மாவட்டங்களில் அரசு பள்ளிகள் நான்கு நாட்களாக செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனாலும், எச்சரிக்கையை மீறி போராட்டம் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அடுத்தக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த மிரட்டலையும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்னதான் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினாலும், சென்னையில் உள்ள தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் அந்த போராட்டம் வெற்றிபெறும் என்ற நிலை இருந்து வருகிறது. இதனால், மற்ற மாவட்டங்களில் உள்ள சக ஊழியர்கள், தலைமை செயலக ஊழியர்களும் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரினர்.
தலைமை செயலக சங்க நிர்வாகிகள், அரசுக்கு ஆதரவான செயல்பாட்டை எடுத்து வருவதால், உடன் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், உணவு இடைவேளையின்போது திரண்டு, அரசுக்கு எதிராகவும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் அவசர பொதுக்குழு கூடி போராட்டத்துக்கு தலைமை செயலக ஊழியர்களும் ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்கட்டமாக நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது, மதியம் 1.30 மணிக்கு பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் தலைமை செயலக ஊழியர்கள் அரசுக்கு எதிரான முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பேசிய தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, அரசுக்கு இரண்டு கோரிக்கைகள் வைக்கிறோம். ஒன்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, 21 மாத நிலுவைத்தொகையை அரசு உடனே வழங்க வேண்டும். இரண்டு நாளில் அரசு அறிவிப்பை வெளியிடாவிட்டால் வருகிற திங்கள், செவ்வாய் இரண்டு நாள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிப்போம். இல்லை என்றால், புதன்கிழமை மீண்டும் கூடி பேசி போராட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வோம்” என்று அறிவித்தார்.ஆனால், அவரது இந்த பேச்சுக்கு தலைமை செயலக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். `திங்கட்கிழமை (28ம் தேதி) முதல் அரசுக்கு எதிராக தலைமை செயலக ஊழியர்களும் போராட்டம் நடத்த வேண்டும்’’ என்று கோஷம் எழுப்பினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “தற்போதுள்ள தலைமை செயலக சங்க நிர்வாகிகள், நமக்கு ஆதரவாக இல்லாமல் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அதனால் அவர்களை பதவியில் இருந்து தூக்கி எறிவோம். வருகிற திங்கட்கிழமை தலைமை செயலக ஊழியர்களும் ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்து 9 அம்ச கோரிக்கைக்காக போராட்டம் நடத்துவோம்” என்று கூறினர். இதற்கு அங்கு கூடி இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைதட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் தமிழ்நாடு தலைமை செயலக சங்க ஊழியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. தலைமை செயலக ஊழியர்களின் இந்த முடிவு, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.





