Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 31, 2019

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் திறப்பு : கணிதம், அறிவியலை ரோபோ கற்று தரும்


தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றுத்தரும் ரோபோடிக்ஸ் ஆய்வகம் நேற்று திறக்கப்பட்டது. இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில், ரோபோக்களின் பயன்பாடு வளர்ந்து கொண்டே வருகிறது.
வீடு முதல் தொழிற்சாலை வரை இவை பயன்படுத்தப்படுகின்றன. பளுவான பொருட்களை கையாளுதல், மனிதன் செய்ய வேண்டிய பல கடினமான வேலைகளையும் ரோபோக்கள் செய்து வருகிறது.



மாறி வரும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் நவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி திருவிக மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியுடன், அமெரிக்கன் இந்தியா நிறுவனம் இணைந்து ரூ.13.50 லட்சம் செலவில் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் நேற்று துவக்கி வைத்தார்.
10 ரோபோக்கள் மற்றும் இவற்றை கட்டளையிட்டு இயக்கக்கூடிய வகையில் 10 லேப்டாப்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த ஆய்வகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரோபோ மூலம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் எளிதில் வழங்கப்படும். இதற்காக ரோபோட்டிக்ஸ் துறையில் கைதேர்ந்த ஆசிரியை ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார்.



இந்த ரோபோக்கள் ஒரு கணித வரைபடம் 20 ஆண்டுகளுக்கு பிறகு எந்த வடிவில் வரையப்படும் என்பது உள்ளிட்ட அதிசய தகவல்களை தந்து விடுகிறது. இந்நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் (பொ) முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் விஜயகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் அம்மா ஆலிவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அமெரிக்கன் இந்தியா நிறுவன மாநில திட்ட மேலாளர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்மிளா கூறும்போது, ‘‘ஒவ்வொரு ரோபோவும் 10 வேறுபட்ட ஆய்வுச்சோதனைகளை கற்றுத்தரும்.
அந்த வகையில் 100 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் சார்ந்த கல்வியை கற்றுத்தர முடியும்’’ என்றனர்.
மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் கூறும்போது, ‘‘மதுரையின் மற்ற 13 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்பள்ளியில் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.



அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்ப ரோபோடிக்ஸ் ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.
ரோபோ மூலம் படிப்பதால் மாணவர்களுக்கு ஒரு ஆர்வமும், மகிழ்ச்சியும், ஈடுபாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களுக்கான இந்த நவீன அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் கற்றுத்தரும் ரோபோடிக்ஸ் ஆய்வகம் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.
டைப் செய்தால் போதும் வரைபடம் வரைய கற்கலாம்



மாநகராட்சி கல்வி அலுவலர் (பொ) ராஜேந்திரன் கூறும்போது, ‘‘லேப்டாப் மூலம் ரோபோவுக்கு கட்டளையிட வேண்டும். உடனே அதை புரிந்து கொண்டு ரோபோக்கள் இயங்கும்.
உதாரணமாக ஒரு வரைபடத்திற்குரிய பெயரை டைப் செய்து கட்டளையிட்டால், அந்த வரைபடம் எந்த வடிவத்தில் இருக்கும். அதை எப்படி வரையலாம். எவ்வளவு மணி நேரத்தில் வரைந்து முடிக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை ரோபோக்கள் செய்யும்’’ என்றார்.