Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 11, 2019

வேளாண் பல்கலை காலியிடம் நிரப்பும் பணி துவக்கம்








கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய காலிப் பணியிடங்களை நிரப்பும் செயல்பாடுகள், நேற்று துவங்கின.

வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி, நேரில் ஆய்வு செய்தார்.கோவையில் உள்ள வேளாண் பல்கலையில், ஆறு ஆண்டுகளாக, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, டீன், இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல், பொறுப்பு பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. புதிய துணைவேந்தர் குமார் பொறுப்பேற்ற பின், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.





இதன்படி, பதிவாளர், 11 டீன் பணியிடங்கள், 14 இயக்குனர்கள் மற்றும் ஒரு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் உட்பட, 27 பதவிகளை நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள், டிச., மாதம் வெளியிடப்பட்டு, ஜன., 3 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்கலை தரப்பில், பெரும்பாலான பேராசிரியர்கள், விண்ணப்பித்து உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, நேர்காணலுக்கு தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்தது.





நேற்றும், இன்றும் நேர்காணல் நடக்கிறது. நேற்று காலை, வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது. அப்பட்டியலில் தகுதி பெற்றவர்களுக்கு, மதியத்துக்கு மேல் நேர்காணல் செயல்பாடுகள் துவங்கின.பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், &'பல்கலை பதிவாளர் உள்ளிட்ட, 27 பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் தற்போது நடந்து வருகிறது. தெளிவான விபரங்கள், விரைவில் தெரிவிக்கப்படும்&' என்றார்.
Back To Top