ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.


இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிக அளவில் பங்கேற்று உள்ளனர். பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் வெறும் 2 ஆசிரியர்களே உள்ளனர்.


அவர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் 3-ம் பருவ திருப்புதல் தேர்வு மற்றும் பிற கற்பித்தலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும் 9-ம் வகுப்பில் இருந்து உயர் வகுப்புகளுக்கு செயல்முறை தேர்வுகளும் உடனடியாக தொடங்குவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாணவர்களின் நலன் கருதி, தொடக்க கல்வி இயக்குனர் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்தார்.


அரசு மற்றும் பிற அதிகாரிகள் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்தும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்பதை நானும் குறிப்பிடுகிறேன். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதி சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.



அதன்படி, பள்ளியின் அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட். முடித்தவர்கள், முதுகலை தகுதி பெற்றவர்கள்) பெற்றோர்-ஆசிரியர் கழகம் தற்காலிகமாக நியமித்து, பள்ளியை சுமுகமாக நடத்த அறிவுறுத்த வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் கழகம் இல்லாத பள்ளிகள், அருகில் உள்ள உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளிகளில் உள்ள சங்கங்கள் மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்.



பணிக்கு வராத ஆசிரியர்கள் 25-ந்தேதி (இன்று) வரையிலும் கண்காணிக்கப்படுவார்கள். 26-ந்தேதி (நாளை) முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 28-ந்தேதி முதல் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக எந்த இடையூறும் இல்லாமல் பள்ளிகளை திறக்க வேண்டும்.



வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் ஏதேனும் இடையூறு செய்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் புகார்களை பதிவு செய்ய வேண்டும்.



வேலை செய்யாத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படக்கூடாது. இதனை களப்பணியாளர்கள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக பணிக்கு வராதவர்கள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

Categories