தமிழகத்திலேயே முதன் முறையாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி. வகுப்புக்கு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன. இது குறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய-நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கூறினார்






