Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 25, 2019

10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு





சென்னை அருகே சிறுசேரியில் ராட்சத பலூன் மூலம் செயற்கைக்கோள் பறக்கவிட்ட 10 வயது மாணவனின் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானி உள்பட பலரும் பாராட்டினர். சென்னையில் செயல்பட்டு வரும் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’’ என்ற நிறுவனம் விண்வெளி துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து ஏற்கனவே என்.எஸ்.எல்.வி. வகை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உள்ளது.


இந்நிலையில் நேற்று ‘ஸ்பேஸ் கிட்ஸ்’’ பயிற்சி மாணவர் பிரதீக் (10) என்பவர் தயாரித்த ‘விக்ரம் சாட்’’ என்ற செயற்கைக் கோளும், கிரசன்ட் கல்லூரி மாணவர்கள் தயாரித்த ‘கிரசன்ட் சாட்’’ என்ற செயற்கைக்கோளும் சென்னை அருகே உள்ள சிறுசேரி சிப்காட் வளாகத்தில் வைத்து ராட்சத நைட்ரஜன் பலூன் மூலம் ஏவப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்த 2 செயற்கைக் கோள்களும் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


எங்களது அமைப்பில் பயின்று வரும் 10 வயது மாணவர் பிரதீக் என்பவரின் மேற்பார்வையில் உருவான செயற்கைக்கோள் விண்ணில் உள்ள வெப்பநிலை குறித்து ஆராயும். அதேபோன்று கிரசன்ட் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள கிரசன்ட் சாட் என்ற செயற்கைக்கோள் வளி மண்டலத்தில் உள்ள பல்வேறு வாயுக்கள் குறித்து அறிதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மருத்துவ துறையில் ரிமோட் சென்சிங் பயன்பாடு, பசுமைப் படலத்தின் அடர்த்தி ஆகியவை குறித்து ஆராய பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.