Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 26, 2019

20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு மட்டுமே இனி நிகர்நிலை பல்கலை. அந்தஸ்து: யுஜிசி புதிய வழிகாட்டுதல்


குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இனி நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும் என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான புதிய -நிகர்நிலைப் பல்கலைக்கழக வழிகாட்டுதல் 2019-ஐ யுஜிசி வெளியிட்டுள்ளது. உயர் கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை யுஜிசி எடுத்து வருகிறது. அதனடிப்படையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டிருக்கிறது.


அதன்படி, ஓர் உயர் கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், அந்தக் கல்வி நிறுவனம் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதோடு, தொடர்ந்து மூன்று சுற்றுகளிலும் 3.26 நாக் (தேசிய அங்கீகாரம் மற்றும் ஆய்வுக் கவுன்சில்) புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக இருந்தால், அங்கு வழங்கப்படும் படிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு படிப்புகளுக்கு என்பிஏ (தேசிய அங்கீகார வாரியம்) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.


மேலும், தேசிய உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் (என்.ஐ.ஆர்.எப்) ஒட்டுமொத்த தரவரிசையில் 100 ரேங்க்குகளுக்கு உள்ளும், குறிப்பிட்ட பிரிவு தரவரிசைப் பட்டியலில் 50 ரேங்க்குகளுக்குள்ளும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் - விகிதாசாரம் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்கவேண்டும். குறிப்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான கல்வி நிறுவனத்தின் விரிவான திட்ட அறிக்கையையும், ஐந்தாண்டு திட்ட விவரத்தையும் கல்வி நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.