
கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயம் செய்துள்ள அடிப்படை சம்பளம் ₹50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி கல்வி இயக்குநரிடம் மனு கொடுத்தனர். அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு ஒரு தொகையை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது:
கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக பல்கலைக் கழகம் கடந்த முறை ₹25 ஆயிரம் நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், கல்லூரி நிர்வாகங்கள் அந்தத் தொகையை முழுமையாக வழங்கவில்லை. தற்போது அந்த அடிப்படை தொகையை பல்கலைக்கழக மானியக் குழு ₹50 ஆயிரம் என உயர்த்தியுள்ளது. இருப்பினும், கல்லூரி நிர்வாகங்கள் எங்களுக்கு ₹15 ஆயிரம்தான் வழங்கி வருகின்றன. பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ள தகுதியுடன்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதனால், தகுதியுள்ள அனைவருக்கும், பல்கலைக் கழக மானியக் குழு நிர்ணயம் செய்துள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். கடந்த 2010 ஜனவரி முதல் மேற்கண்ட சம்பளம் தராமல் உள்ளதால் நிலுவைத் தொகை ₹15 லட்சம் வழங்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதியிடம் மனு கொடுத்தோம்.


