Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை


தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாநில சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 104 உதவி மையத்தின் மூலம் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து 104 உதவி மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சுகாதாரத் துறையின் கீழ் 24 மணிநேர தொலைபேசி சேவையான 104 மருத்துவ உதவி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் தொடர்பான தகவல்கள், உடல்நலம் மற்றும் உளவியல் ஆலோசனை மற்றும் புகார் ஆகியவற்றுக்காக 104 மருத்துவ உதவி மையத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவை மூலம் இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 268 பேர் பயனடைந்துள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு காலத்தின்போது சிறப்பு முகாம்கள் 104 மருத்துவ உதவி மையம் மூலம் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் மாணவர்களுக்கான சிறப்பு உளவியல் ஆலோசனை முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்விற்கு எப்படி நம்பிக்கையோடு தயாராவது, அதனை எவ்வாறு நம்பிக்கையோடு எதிர்கொள்வது, பதற்றத்தை தவிர்ப்பது எப்படி, மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி, நினைவாற்றலை பெருக்குவதற்கான எளிய வழிமுறைகள் என்னென்ன?,

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பயிற்சிகள் எவை?, எண்ணச் சிதறலை எப்படி தவிர்ப்பது, உணவு முறைகள், உறங்கும் முறைகள், பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தினரின் அழுத்தத்தை பயன்தரும் விதமாக கையாளுவது எப்படி என பல்வேறு விஷயங்கள் குறித்த சிறப்பு ஆலோசனை வழங்குவதற்காக உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் செயல்படுகிறது.


இந்தச் சிறப்பு சேவை மார்ச் மாதம் முழுவதும் செயல்படும். தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் 104-ஐ தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்களிலும் இந்த சேவைகள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.