Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

சமூக வலைதள வதந்தியை நம்பாதீர் : மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை


'பொது தேர்வுகள் குறித்து, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, மாணவர்களை, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுக்கான வினாத்தாள், விதிமுறைகள் குறித்து, பல்வேறு தகவல்கள், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளங்களில் பரவுகின்றன.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள், பிப்., 15 முதல் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்க உள்ளன. எனவே, மாணவர்கள் முன்கூட்டியே சென்று, தங்கள் தேர்வு மைய இடங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.தேர்வு மையங்களுக்கு, காலை, 9:45 மணிக்குள் சென்று விட வேண்டும். போக்குவரத்து பிரச்னைகளை மனதில் வைத்து, மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். காலை, 10:00 மணிக்கு பின், எந்த மாணவரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பள்ளி மாணவர்கள் கட்டாயம் சீருடை அணிந்து வர வேண்டும்.

தனி தேர்வர்கள், மெல்லிய ஆடை அணிந்து வர வேண்டும். மொபைல்போன் உட்பட, எந்த மின்னணு சாதனங்களும் எடுத்து வரக் கூடாது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.பொது தேர்வு தொடர்பாக, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில், தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.